Thursday, December 8, 2011

சுதந்திர அடிமைகள்

எதிரிகளை மட்டுமன்றி, நாட்டில் நிலவும் உட்பகை குறித்தும் உளவு பார்ப்பது ஏற்கக்கூடியதாகவே இருந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு மனிதனையும் ஒற்றுப்பார்த்து, அவர்தம் அந்தரங்க விவகாரங்களையும் தெரிந்துகொள்வது சரியா?, 


இது ஒரு அரசின், குறிப்பாக மக்களாட்சியின் இறையாண்மைக்குப் பொருந்துமா? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வியை எழுப்பியிருப்பவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே. 
லண்டனில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், அங்கு வந்திருந்த மக்களிடம், "நீங்கள் பயன்படுத்தும் செல்போனும் உளவு பார்க்க உதவி செய்கிறது. மக்கள் அனைவரையும் அரசாங்கம் உளவு பார்க்கிறது' என்று கூறியிருக்கிறார். 
இத்தகைய உளவு பார்க்க உதவும் தகவல் தொழில்நுட்பக் கருவிகளை மேலை நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மிக அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருக்கின்றன. லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபி உள்நாட்டு மக்களில் சிலரும் இங்கிலாந்து சென்று வாழும் லிபிய மக்களும் தனக்கு எதிராக இருப்பதை உளவுத் தகவல் தொழில்நுட்பத்தினால் அறிந்து, அவர்களைத் தீர்த்துக்கட்டியிருக்கிறார். மேலைநாட்டுத் தகவல் தொழில்நுட்பக் கருவித் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உளவுக் கருவிகளை லிபியா, சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு விற்றுள்ளன. இந்திய அரசின் சிபிஐ அனுப்பும் மின்கடிதங்கள் அனைத்தையும் சீனா படித்துக் கொண்டிருக்கிறது என்று அசாஞ்ச் சொல்லும்போதும்கூட, ஒரு நாடு ஒரு அண்டை நாட்டின் மீது இப்படித்தான் தன் கவனத்தைச் செலுத்தும் என்கின்ற வகையில் புரிந்துகொள்ள முடிகிறது. 

ஆனால், மக்களாட்சி நடைபெறும் நாட்டில்கூட, அனைத்து மக்களையும் உளவு பார்க்க முடியும், செல்போனும் இணையதளமும் அதை சாத்தியம் ஆக்குகிறது என்பதை அறியும்போது, கொஞ்சம் ஆச்சரியத்தையும் - கூடுதலாக அச்சத்தையும் உண்டாக்குகின்றது.தீவிரவாதத்தைக் கண்காணித்தல், நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் ஒவ்வொரு நாடும் எப்படி உளவு பார்க்கின்றன, இவை பொருளாதார வர்த்தகப் பயன்பாட்டுக்கு எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பது வளர்ச்சியால் ஏற்படும் தீமைகள் என்று ஒதுக்கிவிடக்கூடியவை அல்ல. 

இத்தகைய உளவு பார்க்கும் தகவல்தொழில்நுட்ப வசதியால் தனிமனித அந்தரங்கம் என்பதே இல்லாமல் ஆகிவிட்டது.இந்த உளவுத் தொழில்நுட்பம் வெறுமனே அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படுவதில்லை. இவை பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கும் கிடைப்பதில் தடையில்லாமல் கிடைக்கின்றன. தங்களுக்கு இணையாகப் போட்டியில் உள்ள அல்லது வளர்ந்துவரும் மற்றொரு தொழில் நிறுவனத்தைக் கண்காணிக்க இதனைப் பயன்படுத்த முடியும். ஓர் அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை வேவு பார்க்கப் பயன்படுத்தலாம். கணினி மூலம் நடைபெறும் அனைத்து வர்த்தகப் பரிமாற்றங்கள், வணிகச் செயல்பாடுகளிலும் இத்தகைய உளவுத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம். 

ஆக, ஒன்று மட்டும் உறுதியாக்கப்பட்டுள்ளது. மின்அஞ்சல், செல்போன் இரண்டையும் எவராலும் உட்புகுந்து கண்காணிக்க முடியும். செல்போனும் இணையதளமும் பாதுகாப்பான நடைமுறைகள் அல்ல என்பதைத்தான் இந்தத் தொழில்நுட்பம் நமக்குப் புரிய வைத்துள்ளது. ஆனால், இவை இல்லாமல் இனி எந்தவொரு தனிமனிதனாலும் செயல்படவே முடியாது என்கிற அளவுக்கு தகவல் தொழில்நுட்பத்தின் பொன்விலங்கை வேண்டுமென்றே மனித இனம் பூட்டிக்கொண்டாகிவிட்டது. சாதாரண வங்கிக் கணக்கை செயலாக்கவும், ரயில் பயணத்தை முன்பதிவு செய்யவும்கூட நமக்கு இணையதளம் அவசியமாகிவிட்டது. 

இனி பின்னோக்கிச் செல்லுதல் இயலாது.இணைய தளத்தில் உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர் அனுப்பும் மின்அஞ்சலை ஆர்வத்தால் திறந்தாலே போதும், அதில் நமது தகவல்கள் அனைத்தையும் உறிஞ்சிக்கொள்ளும் சைத்தான் மென்பொருள்கள் உள்ளன என்று சொன்னாலும் அதை உள்வாங்கிக்கொள்ள ஆளில்லை. ஃபேஸ்புக் பகுதியில் யார் வேண்டுமானாலும் நுழைய முடியும் என்றாலும், அனைத்துத் தகவல்களையும் அதில் கொட்டிவிடாத ஆட்கள் மிகக் குறைவு. இந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் இருக்க முடியாது, வாழவே முடியாது என்கின்ற நிலைமை உருவாக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், இத்தகைய கண்காணிப்பு மற்றும் உளவுத் தொழில்நுட்பத்தை யார் விற்கலாம், யார்யாரெல்லாம் வாங்கிப் பயன்படுத்தலாம், பயன்படுத்தப்படுவதில் உள்ள அளவுகள், எல்லைகள் என்ன என்பனவற்றை வரையறை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் இதற்கு மேலதிகமான தேவை இருக்கிறது. ஏனென்றால், இங்கே தகவல்தொழில்நுட்பத்தில் அதிகளவில் வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முதலீடு செய்துள்ளன. இந்நிறுவனங்கள் தாங்கள் சேகரிக்கும் உளவுத் தகவல்களை இந்திய அரசுக்கு வழங்கினால் பரவாயில்லை. வேறு நாடுகளுக்கோ அல்லது தீவிரவாத அமைப்புக்கோ கிடைக்கச் செய்தால் எத்தனை மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.தீவிரவாதம் தலைவிரித்து ஆடும் இன்றைய சூழ்நிலையில் இத்தகைய தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் வாங்கி, அரசையும் மக்களையும் கண்காணிப்பதும் உளவு பார்ப்பதற்குமான சாத்தியங்கள் இருப்பதை மறுக்க முடியாது. 

 தகவல் தொழில்நுட்பத் துறை தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவு 2ஜி போன்ற மெகா ஊழல் மட்டுமல்ல, தேசப்பாதுகாப்புக்கும் தனிமனித சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தலும் கூட என்பதை இப்போதாவது நாம் புரிந்து கொண்டால் சரி!அப்படிஇல்லையானால் நாம் அனைவரும் சுதந்திர அடிமைகளாகத்  தான் வசிக்க வேண்டியிருக்கும்.
நன்றி  : தினமணி

0 comments:

Post a Comment