Thursday, March 8, 2012

மார்ச் 8 கொண்டாட்டங்கள்!!!

இயற்கை அன்னையின் மறுபதிப்பாய் மண்ணில் உதித்த மங்கையரே!

இன்று மார்ச் 8,உங்கள் தினக்கொண்டாட்டங்கள் ஓய்ந்ததா?


மறந்திருக்கமாட்டீர்கள்,
உங்களுக்கு இன்னும் 33% வரவில்லை.
சமீபத்திய கணக்கெடுப்பின் படி,உங்களில் கிட்டத்தட்ட 40% பேருக்கு எழுதப்படிக்கக்கூட தெரியாது.

அடடே,பணிஇடத்தில்,அலுவலகத்தில் இத்தனை பெண்களா என்று வியந்துவிடாதீர்கள்-உங்களில் இன்னும் 80%பேர் இன்னும் இந்நிலை எய்தவில்லை,அப்படியென்றால் நீங்கள் அவ்விடங்களில் காணுறுவது வெறும்  20%தான்.

இன்னொரு விந்தை தகவல் தெரியுமா உங்களுக்கு,இந்தியாவில் 1000 ஆண்களுக்கு, 940 பெண்கள் தான் உள்ளீர்கள்.
என்றால் மீதமுள்ள ஆண்கள் என்ன செய்வார்கள் என்றெல்லாம் கேட்ககூடாது.அது அவர்கள் பாடு!!!!????

இவையெல்லாம் ஏதோ ஏமாற்றுக்கார எடுப்பார் கைப்பாவை வாசகங்கள் அல்ல, இந்திய அரசே வெளியிட்டவை!!

இதற்கும் கொண்டாட்டங்களுக்கும் என்ன சம்பந்தம்???????????
இருக்கிறது!-Clara Zetkin என்னும் ஜெர்மானிய பெண்மணியால் முன்மொழியப்பட்டதே-உலக மகளிர்தினம்.
அதன் காரணம் தெரியுமா?
"women throughout the world should focus on a particular day each year to press for their demands"
இப்போது புரிகிறதா யுகயுகங்களாய் பறிக்கப்பட்ட உங்கள் உரிமைகளை மீட்கப் கொணர்ந்த நாள் இது-மார்ச் 8.

மானென்றும்,மயிலென்றும் காளையர்கள் கூறியதில் மயங்கியிருந்தாயே-கரங்களில் பூவிலங்கொன்று போடப்படுவதை உணராமல்.அவ்விலங்கை ஒடிக்கப்பிறந்தநாளிது!

ஆணுக்குப்பெண் நிகரில்லை எனும் சமூகத்தில், பட்டங்கள் கொள்வதும்,சட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம் என புரட்சிகரமாய் புறப்படப் பிறந்தநாளிது!

கற்பு நெறி தவறி,காமநிலை தழுவும் போகப்பொருளே பெண்கள் எனும் நினைப்போடு,உன்னைத் தீக்குளிக்கச் சொல்லும் இன்றைய ராமன்களை, உன் தூவிழியால் சுட்டெரிக்கப் பிறந்த நாளிது!

இப்போ தெரிகிறதா! இந்த நாள் கொண்டாட அல்ல,போராட!!!
ஊருக்குள் ஒரு தெரசாவும்,ஒரு கல்பனா சாவ்லாவும் உதாரணம் காட்டிக் காட்டி மகிழ்ந்தது போதும்,நீங்கள் அனைவருமே தெரசாவாய்,சாவ்லாவாய் மாறிடவேண்டும்!.
அதற்குத் தான்-மார்ச் 8!!ஆனால்,
விடுதலை என்றால் ஆடையோடு முடிந்துவிடும் உணர்வு உன்னுள் வந்தது ஏன்?

அழகு சாதனங்களின் ஒட்டு மொத்தக் குத்தகையாக மாறியிருப்பது ஏன்?

புன்னகையை விட பொன்னகை மேலுன் பற்று போனது எவ்வாறு?

Happy Women's Day---வாழ்த்துகளோடு இந்நாள் முடிந்துவிடுகிறதே எப்படி?

இவ்வாறு உன் ஆழ்மன எண்ணங்களிலும் அடிமைச்சட்டையை உடுத்தியிருக்கிறாயே,அதை நீ உணர வேண்டும்-கழட்டி உதறிவீச வேண்டும்.

உன்னை சமமென ஏற்க மறுக்கும் சொத்தை பிடித்த சமுதாயப் பல்லை பிடுங்கி எறிய வேண்டும்.

ஆகவே,பெண்ணே!நன்றாகத்தெரிந்துகொள்!!
கொண்டாடுவதற்கு தீபாவளி,பொங்கல் இருக்கிறது,
ஆனால்,
உன்னை உனக்கென உணர்த்த வேண்டிய நாள்தான்-மார்ச் 8!!!
உண்மையுடன்,உறுதியுடன்,உள்ளச்சுத்தியுடன்,
காட்டுச்சிறுக்கி
தேன்மழை

2 comments:

 1. எத்தனையோ பெண்கள் எவ்வளவோ சாதித்திருக்கிறார்கள், அவர்களை எல்லாம் விட்டு விட்டு இந்த கல்பனா சாவ்லா என்ன சாதித்தார் என்று இப்படி தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள் என்று தான் தெரியவில்லை... மன்னிக்கவும்.. உங்கள் முழு கட்டுரையும் அருமையாக இருந்தது.. ஆனால் நாடகத்தனமாக மாறி விட்டது சாவ்லாவின் பெயரை இணைத்த உடன்...

  ReplyDelete
 2. முதலில் தங்கள் கருத்துரைக்கு நன்றிகள் தோழர்.

  கல்பனா சாவ்லா பற்றி:

  1.நிறைய பெண்கள் சாதித்தார்கள் தான் மறுக்கவில்லை,

  ஆனால் நாம் பதிவில் பயன்படுத்திய இடத்துக்கு,"உலகறிந்த இந்தியப் பெண்" பற்றி விளம்பவேண்டியிருந்தது.

  அதில் எமக்கு மட்டுமின்றி பலருக்கும் நினைவுக்கு வருது ஒருவர் தெரசா மற்றொருவர் சாவ்லா!!

  2.சாவ்லா என்ன சாதித்தார் என்று கேட்டுவிட்டீர்களே!

  சும்மா கூகிள் செய்து பாருங்கள்.தமிழிலேயே அவர் சாதனைகளைப் பற்றி பலர் விரிவாக எழுதியுள்ளனர்.

  அதற்கெல்லாம் மணிமகுடம் போல் இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க 2004 ல் இருந்து கர்நாடகஅரசே கல்பனாசாவ்லா விருது தருகிறது என்றால்,அவர் சாதனைகளை நாம் எங்கனம் மறப்பது,இகழ்வது?

  மேலும், கல்பனா சாவ்லா போல் விண்ணை அளந்த இந்தியப் பெண்கள் யாரேனும் தங்களுக்கு தெரிந்தால் எமக்குத் தெரியப்படுத்தவும்.

  ReplyDelete