Wednesday, December 28, 2011

"அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான்'!


mullai_periyaaru_anaiஎதை விதைக்கிறோமோ அதுதானே முளைக்கும்.
இது அனைவருக்கும் தெரியும்; அன்பை விதைத்தால் அன்பே முளைக்கும்; வம்பை விதைத்தால் வம்புதானே விளையும். கேரள அரசாங்கம் தம் மக்களைத் தூண்டிவிட்டு வெறுப்பையும் வன்முறையையும் விதைத்துவிட்டு அறுவடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

தமிழகத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா! சாது மிரண்டால் காடு கொள்ளாது; தமிழ் மக்கள் மிகுந்த கோபம் கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்குக்கே கறுப்புக்கொடி காட்டும் அளவுக்குக் கோபம் உச்சநிலையை அடைந்துள்ளது. கட்டிக்காக்க வேண்டிய அரசே கொட்டி இறைத்தால் அதை பொறுப்புள்ள தலைமை என்று கூற முடியுமா?

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்கள் கொதிநிலையை அடைந்துள்ளனர். உறங்கிக் கிடந்த தமிழ் மக்களை உசுப்பிவிட்ட பெருமை கேரள அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையுமே சேரும். உச்ச நீதிமன்றத்தில் இருந்த விவகாரத்தை உள்ளூர் சண்டையாக உருமாற்றி விட்டார்கள்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு ஆய்வு மேற்கொண்டிருக்கும் நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாகவும், அணையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உயர்நிலைக் குழுவிடம் கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்களை வகுப்பதற்காக தனியான குழு ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் தலைமையிலான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் திரும்பப் பெறும்படி தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

"புதிய அணையைக் கட்டியே தீருவோம்'' என்று கொக்கரிக்கும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி, "தமிழகத்துடன் பேசத் தயார்'' என்று கூறுவது idukki-arch-dam1வேடிக்கையாக இருக்கிறது.

"மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் கேரள அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற முடிவை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்'' என்றும் கூறியுள்ளார்.

வீண் சண்டைக்கு இழுத்து, சமாதானம் பேசும் கட்டப்பஞ்சாயத்து முறை இது. இதற்குத் தமிழகம் உடன்பட வேண்டுமா?

"முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகம் தனக்குள்ள உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காது' என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித நாகரிக வரலாற்றை ஆய்வு செய்தாலும், நீரும் நீர் மேலாண்மையுமே மனித இனத்தின் அடிப்படை உரிமையாகிறது.

’நீரின்றி அமையாது உலகு' என்று குறள் கூறுகிறது. மனித நாகரிக வரலாற்றில் வேளாண்மையே முதலிடம் வகிக்கிறது. இதற்குக் காரணமான தண்ணீரின் மேலாண்மையே மனிதர்களை நாகரிக மனிதர்களாக மாற்றின.பல நாகரிகங்கள் ஆற்றங்கரைகளில் உருவானதற்கும் இதுவே காரணமாகிறது.

"நாகரிகத்தின் தொட்டில்கள்' என்று அழைக்கப்படும் நான்கு பெரும் நாகரிகங்களும் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே அமைந்தன. தலைசிறந்த எகிப்து நாகரிகம் நைல்நதியின் கரையிலேயே அமைந்திருந்தது. அதனால்தான் கிரேக்க வரலாற்றாசிரியர்கள் "எகிப்து என்பது நைல்நதியின் கொடை' என்று எழுதினர்.

Nile_River_-706765மனிதனுக்கும், தண்ணீருக்கும் உள்ள உறவை விளக்குவதற்கு எகிப்து நாகரிகமே சிறந்த எடுத்துக்காட்டாகும். எகிப்து நாட்டு மக்களின் வாழ்க்கையும் நைல்நதியையே நம்பியிருந்தது.

இதே காலகட்டத்தில் மத்திய ஆசியாவில் உள்ள யூப்ரடிஸ் மற்றும் டைகரிஸ் என்ற இரு நதிகளுக்கிடையில் வளர்ந்த நாகரிகமே சுமேரிய நாகரிகம். இங்கும் வேளாண்மையும், பாசனமும் சிறந்து விளங்கின. சுமேரியா, மெசபடோமியா, பாபிலோனியா என்றெல்லாம் அறியப்பட்ட இந்த நாடு இப்போது இராக் என அழைக்கப்படுகிறது. இப்போது இது படும் பாடு உலகம் அறியும்.

சுமேரிய நாகரிகத்தைப் போலவே சீனாவிலும் யாங்ட்ஸே மற்றும் ஹுவாங்ஹோ என்ற ஆற்றுப்படுகைகளிலும் பாசனமும், வேளாண்மையும் அதையொட்டிய நாகரிகமும் வளர்ந்திருந்தன. சுமேரியர்களைவிட அதிகமாக வெள்ளத்தின் துயரத்துக்கு ஆளானவர்கள் சீனமக்கள். கடந்த 3000 ஆண்டுகளில் 1500 முறை வெள்ளச்சேதம் விளைவித்த ஹுவாங்ஹோ நதியை "சீனாவின் துயரம்' என்றே வரலாறுகள் கூறுகின்றன.

சிந்து நதியின் விளைவாக உருவானதால்தான் அது "சிந்து நதி நாகரிகம்' என்று அழைக்கப்பட்டது. மற்ற நாகரிகங்களை ஒப்பிட்டு நோக்கும்போது சிந்துவெளி நகரங்களின் அமைப்பு வியப்பூட்டுகிறது.

மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும் இரு நகரங்கள் வல்லுநர்களையே திக்குமுக்காட வைத்தது. சிந்து நதியின் பாசன வேளாண்மை சிறந்த நிலையில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

huang_he-7110உலகின் எல்லா நதிகளும் இதைப்போன்ற நாகரிகங்களை உருவாக்கிவிடவில்லை. ஆரம்பத்தில் மனிதர்கள் உணவு உற்பத்தியில் ஈடுபடுவதற்கு ஆறுகளில் பாசன வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பெருமைமிக்க நீர்ப்பாசன முறையை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் வளர்த்தெடுத்தனர். அதற்கு எடுத்துக்காட்டே முல்லைப் பெரியாறு அணையும், மேட்டூர் அணையுமாகும். வறட்சிப் பிரதேசமாக இருந்த மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் மக்களை வாழ வைப்பதற்கு வைகை நதியால் முடியவில்லை. 1861 - 62-ம் ஆண்டுகளில் தொடர்ந்து கடும் பஞ்சம் ஏற்பட்டது. இப்பஞ்சத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர்; பல்லாயிரக்கணக்கானவர்கள் பிழைப்புத் தேடி வெளியிடங்களுக்குப் போயினர்.

வைகை நதி வறண்டுபோன காலங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் ஓடும் பெரியாறு ஏராளமான நீரை வீணாகக் கடலில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நீரைப் பயன்படுத்தி அப்பகுதி மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற பரந்த நோக்கத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதுதான் முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கமாகும்.

1808-ல் சர் ஜேம்ஸ் கால்டுவெல் இத்திட்டத்தை ஆய்வு செய்தார். கர்னல் பென்னி குயிக் கடுமையான உழைப்பால் கட்டி முடித்தார். 1895 அக்டோபரில் ஆளுநர் வென்லாக் பிரபு முறைப்படி திறந்து வைத்தார். 999 ஆண்டுகளுக்கு திருவனந்தபுரம் அரசு சென்னை அரசுக்குக் குத்தகைக்கு விட்டது. 999 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பது உடன்படிக்கை.

இதன் மூலம் மிகவும் பின்தங்கியிருந்த மதுரை, இராமநாதபுரம் பகுதிகள் புதுவாழ்வு பெற்றன. 22 ஆயிரம் ஏக்கர் மட்டுமே விளைநிலமாக இருந்த இப்பகுதிகளுக்குப் பாசன வசதியளித்து 2 லட்சம் ஏக்கர் நிலப்பகுதியை விளைநிலமாக்கி, அப்பகுதி மக்களின் வாழ்வையே மாற்றியமைத்துவிட்டது. அதற்கும் இப்போது சோதனை வந்துவிட்டது; சொல்ல முடியாத வேதனையும் வந்துவிட்டது.

ஆங்கிலேயரின் மனிதநேயம் நம் மக்களை வாழ வைத்தது. நம் அண்டை மாநில சகோதரர்களால் நம் வாழ்வாதாரங்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அணை கட்டப்பட்டு 116 ஆண்டுகளாகி விட்டதால் பழையதாகிவிட்டதாம். அணை பலவீனமாகி விட்டது. அது உடைந்தால் மக்களுக்கு பெருஞ்சேதம் விளையுமாம். அதனால் அணையை உடைப்போம் என்று கூக்குரல் எழுப்புகின்றனர். ஆனால், உடைவது அணை மட்டுமல்ல, இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதை மறந்துவிட்டனர். ஆத்திரத்தில் ஓர் அரசாங்கமே அறிவிழந்து போகலாமா?

"மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைக்கு தண்ணீர் காரணமாக இருக்கக் கூடாது. நதிநீர் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்பட்டால் அதை நம் நாடு தாங்காது...'' என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எச்சரித்துள்ளார். இது தேசத்துக்குத் தேவையான நேரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அபாய அறிவிப்பு.

நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகியவை தேசிய அளவிலான அமைப்புகள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அதேபோல் நாட்டின் நீர் ஆதாரத்தையும் நிர்வகிக்க தேசிய அளவிலான அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அவர் கருத்து.

அமெரிக்காவில் உள்ள மிசிசிபி ஆறு அந்நாட்டிலுள்ள 32 மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. ஆற்றுநீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக Mississippi_River_Lock_and_Dam_number_12மாநிலங்களுக்கு இடையே அங்கும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கடந்த 200 ஆண்டுகளாக மிசிசிபி ஆற்று நீர்ப் பங்கீடு, பராமரிப்பு அந்த நாட்டு ராணுவத்தின் பொறுப்பில் உள்ளது என்பதால் இதை ஏற்கத் தயக்கம் வேண்டியதில்லை.

"இப்போது நம் நாட்டில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க நீர் ஆதாரங்களைத் தேசியமயமாக்க வேண்டும் என்றும், ஆறுகள், அணைகளை ராணுவம் அல்லது கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அதன் மூலம் நமது நாடு அமைதியாக வளர்ச்சிப் பாதையில் செல்லும்' என்றும் அப்துல் கலாம் இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விவசாயம் தொடர்பான மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தக்க தருணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சரியான தீர்வாகும்; இதற்கு எந்த அரசியல் சாயமும் பூச வேண்டிய தேவையில்லை. நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டும்.

"கங்கை - காவிரி இணைப்புத் திட்டம்' விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. தென்னக ஆறுகள் இணைப்புத் திட்டமும் பேச்சோடு போனது. இவை செயல்படுத்தப்பட்டிருக்குமானால் இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நதிநீர்ப் பிரச்னையையும் தவிர்க்கலாம். ஆனால், அரசாங்கம் இந்தத் திட்டங்களை மட்டுமல்ல, நாட்டு மக்களையும் கைவிட்டுவிட்டது.

"அடுத்த உலகப்போர் தண்ணீருக்காகத்தான்' என்று அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்திய நாட்டில் நதிநீர் காரணமாக உள்நாட்டுப் போர் ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு விவகாரம் உள்நாட்டுப் போருக்கான ஒத்திகையாக இருக்கக் கூடாது.

- உதயை மு. வீரையன்

நன்றி: தினமணி

0 comments:

Post a Comment