Tuesday, February 7, 2012

வாளு போய்.., கத்தி வந்தது..!!!

நன்நெஞ்சே!

 கொக்குவிரட்டி எதையோ யோசித்துக்கொண்டே வந்தான், என்ன என்றதற்கு இவன் கொசு விரட்டியைத் தேடிச்சென்று கொண்டிருந்தானாம்,வழியில் தேனாற்றங்கரையைக் கடக்கும் போது  அரைமுங்கி முதலையும் பெருங்கொண்டை சிங்கமும் பெரும்கூச்சல் அரவத்தொடு விவாதித்து கொண்டிருந்தனவாம்.


இவன் அருகில் சென்று கேட்டானாம்.அப்போது இந்த வனமக்களை நாம் இருவரும் பயம் கொள்ள வைத்தாலும்,என்னைப்பார்த்துதான் அதிகம் கிலிகொள்கின்றனர்,உனக்கு இந்த பெரிய நிலை வந்ததே என்னால் தான் என்றதாம் கொண்டை.
வேண்டுமானால் கரையின் வடபகுதியில் மக்கள் வரும்போது நாம்இருவரும் நிற்போம் யாரைப்பார்த்து அஞ்சி ஓகின்றனர் என்று பார்ப்போமா அதற்கு உனக்கு திராணி இருக்கிறதா என்று கொண்டை கேட்டதாம்.அதற்கு முங்கி,நானோ நீரில் இருக்கிறேன்,கரையில் நடந்து செல்லும் மக்களுக்கு எப்படி என்னைப்பார்த்து பயம்வரும்?,அம்மக்கள் அவ்வாறு கரையில் நடந்து செல்லும் போது யாரைப்பார்த்து அஞ்சுவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறும்போதே பின்னால் இருந்த  சொரிமூக்கு எலிக்குஞ்சுகள் முங்கி மேல் கக்கிவைத்துவிட்டதாம்.
முங்கி மீண்டும் நீருக்குள் சென்று அழுதுஅழுது தேனாறே கரிக்கிறதாம்.அதற்கு ஏதாவது செய் பஞ்சாயத்து என்றான் கொக்குவிரட்டி.


பெருங்கொண்டை சிங்கமும் ;; அரைமுங்கி முதலையும்



காமராசரின் கக்கனின் தியாகம் பேசிய இடம், அண்ணாவும் எம்.ஜி.யாரும் ஒலியாய் வாழும் இடம் ஒரு ஆணவத்தையும்,அசிங்கத்தையும் சிலதினங்களுக்கு முன் சுமந்தது என்றால், பார்க்கிற நமக்கு அரசியல் ஒரு சாக்கடையே என்பதை அதிகாரப்பூர்வ அறிவித்ததாகவே எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது என்று சடாலென சிறிதுநேரம் நிலவிய நிசப்தத்தை உடைத்தான் கங்காணி.


அரசியல் சாக்கடையா?

 ஏன் என்று கேட்கத்தான் எதிர்க்கட்சி,ஒரு வேலை இத்தனை நாட்களாய் சும்மாய் இருந்துவிட்டு,திடீரென கேள்விகள் கேட்பதால் அம்மையாருக்கு கோபம் வந்ததோ எனத் தெரியவில்லை என்று இளித்துக் கொண்டே சொன்னான் பச்சிலைப்புடுங்கி.
காட்டுசிறுக்கி இடையில் புகுந்து வந்து, தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் தான் இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி இட்டார்.அவர் பேசியதும் அதற்கு கிடைத்த பதில்களும் இதுதான்,"பேருந்துக்கட்டண உயர்வு மக்களை பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்  ச.கு. அதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, புள்ளிவிபரங்களோடு, டீசல் விலை எத்தனை முறை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார்.   சந்திரக்குமார் தொடர்ந்து, பால்விலை உயர்வைப் பற்றிப் பேசியுள்ளார்.  செங்கோட்டையன், எங்களைப்போல மாடு வைத்திருப் பவர்களுக்குத்தான் விவசாயிகளின் சிரமம் தெரியும் என்றார்.  சந்திரக்குமாரும் சளைக்காமல், நாங்களும் தொழிலாளியாக இருந்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து சந்திரக்குமார், “மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்த கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இந்த பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் இந்தப் பேரவையில் பேசினால் எங்களை எல்லோரும் சாடுகிறீர்கள்” என்றார்.

உடனே பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி எழுந்து, சந்திரக்குமாருக்கு ஆதாரங்களோடு பதில் சொல்லாமல், நீங்களெல்லாம் சட்டசபைக்குள் நுழைந்ததே எங்களால்தான்  என்றார்.  அதற்கு சந்திரக்குமார், எங்களால்தான் நீங்கள் ஜெயித்தீர்கள், உண்மையிலேயே துணிச்சல் இருந்திருந்தால், கட்டண உயர்வுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டியதுதானே என்றார்.

இதற்கு பிறகு நடந்தது நாடறியும்.இப்போது தெரிகிறதா கொளுத்திப் போட்ட கொம்பர் யாரென்று?? என்று கேட்டு விட்டு நிழல் தேடி ஓரமாய் சென்று நின்றாள் காட்டுசிறுக்கி.

உண்மைதான்,எதையோ கேட்க அதற்கு எதையோ பதில் சொல்ல கடைசியில் குழாயடிச்சண்டையானது  சட்டசபை.முதலில் கூட்டணி பற்றி பேசும் இடமா சட்டமன்றம்??
தானே தாண்டவத்தில் இருந்தே இன்னும் மீளமுடியவில்லை.முன்பைவிட கூடுதல் நேரம் மின்வெட்டு,விலைஏற்றம், எனத் தமிழனின் வாழ்வு பாதாளம் நோக்கி போய்கொண்டிருக்கிறதோ என எண்ணும் சமயம், சட்டமன்றத்தில் நிகழ்ந்த விவாதப்பொருளை பார்க்கும் பொழுது,எண்ண வேண்டாம்  தமிழன் வாழ்வு மெய்யாகவே பாதாளம் நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று முகத்தில் அறைந்துவிட்டனர் அரசியல்வியாதிகள்.


ஏன்  இந்த கொலவெறி?


எதையோ எடுத்துக்கொண்டு அருகில் வந்தான் கங்காணி,அதில் ஒரு காணொளியைக் காட்டினான்.அது அந்த சட்டமன்ற நிகழ்வுதான்.பார்த்தபின் ஒரு விசயம் புலப்பட்டது, சபாநாயகர் ஜெயக்குமார், “அமைச்சர் பதில் சொல்கிறார்.  அமருங்கள்.   அமைச்சர் பேசுகையில் பேசுவது மரபல்ல” என்று சொன்ன  உடனே விஜயகாந்த் அமர்கிறார். ஆனால் ஆளும்தரப்பில்  இவரைப்பர்த்து ஏதோ சொல்கிறார்கள், உடனே விஜயகாந்த் கண்கள் சிவக்க கோபம் கொப்பளிக்க,நாவைத்துறுத்தி,கையை நீட்டி எதையோ சொல்கிறார்.அப்போதும் ஆளும் தரப்பில் சும்மாஇல்லாமல்,நத்தம் விஸ்வநாதன் எழுந்து, “இது சினிமா இல்ல. பத்து பேர நீ அடிக்க முடியாது. உட்காரு…”என்று சொல்கிறார்.(அந்தக் காணொளி இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது)


காட்டு முனிஸ்வரர் version 2.0


உண்மையில் அப்படி  விஜயகாந்தை இந்தளவுக்கு கோபப்படுத்தியது எது? என்றபோது, “டேய் குடிகாரா உட்கார்றா”என்றும்,அச்சேற்ற முடியாத தகாதவார்த்தைகளையும் கூறியுள்ளனர் ஆளும் தரப்பு எம்எல்ஏக்களான, சின்னசாமி மற்றும் கலைராஜன் என்றுமெல்லியகுரலில் செவியருகே வந்து சொன்னான் கங்காணி.


என்னா வெறி???!!!

இப்படி,ஒருவரை ,அதுவும் ஒரு எதிர்கட்சித்தலைவரைப்பார்த்துச்சொன்னால்,எப்படிக் கோபம் வராமல் இருக்கும்,ஒருவேளை அப்படி கோபம் வாராமல் இருந்தால்தான் வியப்பு.


இந்த வீரத்தப் பாத்து தான் அம்மா வெட்கப்பட்டாங்களோ??


ஆக, பிழைகள் ஆளும்தரப்பிடமும் இருக்க எதிர்க்கட்சியை மட்டும் ஏன் வெளிஏற்றினார்கள்,ஆளும்கட்சியை வெளியேற்ற முடியாது என்பதற்காவா?
அம்மாட்டோ?அப்படி வெளியேற்றியதற்கு காரணம் விஜயகாந்த் கையைநீட்டிப் பேசினார் என்பதாம்.அந்தக்காணொளியை மீண்டும் ஒரு முறை அனைவரும் நன்றாகப் பாருங்கள்,விஜயகாந்த் மட்டும்தான் கையை உயர்த்திப்பேசுகிறாரா? எத்தனை பேர் ஆளும்தரப்பில் இருந்து கையை உயர்த்திப்பேசுகிறார்கள்.அவர்களெல்லாம் அவைக்கு வெந்தயம் வைத்தார்கள்,விஜயகாந்த் மட்டும் குந்தகம் வைத்துவிட்டார் என்றால் ஆறறிவோடு உள்ளோர்தமக்கு நம்பும்படியாகவா உள்ளது?.

இப்படி கும்பிட்டு கிட்டே இருந்திருந்தா எந்த பிரச்சனையும் வந்திருக்காது!!


அதற்குப் பின் அம்மையார் வேறு எழுந்து “தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்து விட்டால் அவர்கள் இப்படிதான் நடந்து கொள்வார்கள்” என்று சொல்கிறார்.உண்மையில் தன் கண் முன்பாகவே, கொஞ்சம்கூட நாகரீகம் அற்றவர்களாய், மிகவும் தரக்குறைவாக, ஏகவசனத்தில் விஜயகாந்தைப் பேசத் தொடங்கிய உடனேயே அம்மையார்  அதைக் கண்டித்திருக்க வேண்டாமா ? பால் விலை உயர்வைப் பற்றி பேசியதற்கு, பால்வளத்துறை அமைச்சர், எங்களால்தான் அவைக்கு வந்தீர்கள் என்று பேசிய உடனேயே அம்மையார் அதைக் கண்டித்திருக்க வேண்டாமா ?  உண்மையில்,மாபெரும் மக்கள் மன்றமாம் சட்டமன்றத்தில் அவனே, இவனே என்று கூக்குரலிடும் அதிமுகவினரை வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருந்தார் அம்மையார்?   இப்படி கூக்குரல் இட்டவர்களில், மன்னார்குடி மாபியாவுக்கு நெருக்கம் என்று அறியப்படும், கலைராஜன், சின்னசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரே முன்னணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


"உங்களபாத்தாகூடத்தான் அருவருப்பா அசிங்கமா இருக்கு"-விஜயகாந்த்


அதோடு முடிந்துவிடவில்லை," பஸ் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் விலையையும் உயர்த்திய பிறகு சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து நின்று மகத்தான வெற்றியை நாங்கள் அடைவோம். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் (தேமுதிக) முடியுமா என்பதை யோசித்து விட்டுப் பேசுங்கள்.உங்கள் கட்சிக்கு (தேமுதிக) திராணி இருந்தால் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்".இதைக் கூறும் போது அம்மையார் முகத்தில் தெறிக்கும் ஆணவத்தை பார்க்கவேண்டுமே!!அடேயப்பா !!!..கடுகு வெடித்து,தக்காளி தாளித்து விடும் போங்கள்.


யப்பா......கண்ணகி தோற்றாள் போங்கள்!!


முதல்வரின் இவ்வகையான கூற்றுக்களோ, நடவடிக்கைகளோ கடைக்கோடி தமிழனுக்கு  வியப்பாளிக்கலாம்,ஆனால், "தன்னுடைய கூட்டணிக்கட்சிக்கார்களுக்கு எதிரான சாதகமற்றக் கருத்தைக் கூறுவது அவரது வழக்கம்" என்று யாரோ அல்ல, யாரை தன்னுடைய அரசியல் சாணக்கியர் என்று அம்மையார் கருதுகிறாரோ,அந்த சோ.ராம சுவாமியே சொல்லிஇருக்கிறார்.
"வேண்டியபோது பயன்படுத்திக் கொள்வதும்,வேண்டாத போது நிராகரிப்பது என்பதும் இவரின் வரலாற்றில் உண்டு" என்று முன்பொருகாலத்தில் மிகச்சிறந்த விசுவாசியாக இருந்த திருநாவுக்கரசர் கூறுகிறார்.


இவர் தான் இருதீவுகளுக்கு பாலமாய் இருந்திருப்பாரோ??



தமிழக மக்கள் உள்ளாட்சித் தேர்தலிலும் சரி, சட்டமன்றத் தேர்தலிலும் சரி , அதிமுகவுக்கு அமோக வெற்றி கொடுத்ததற்கு காரணம், திமுக, அவர்களின் ஊழல்ஆட்சி  மீது இருந்த கோபம்.ஊர்கூடித்தேர் இழுத்து,தேர் மனைக்கு வந்ததும்,என் வலுவால்தான் தேர் நகர்ந்தது என்பது மூடன் ஒப்புக்கொள்ளத்தகுமே அல்லாது ,நம்மால் ஒப்பமுடியவில்லை.

இந்த இடத்தில் விஜயகாந்த் நடத்தையும் சரி என்று கூற முடியாது,எதிர்கட்சியை வம்புக்கு இழுப்பது என்பது சட்டமன்றத்தில் தொன்றுதொட்டு நிகழும் ஒன்றுதான்.ஏன்,அம்மையாரின் புடவையையே உருவிய துச்சாதன சம்பவங்கள் கூட அரங்கேறியுள்ளது.அந்தமாதிரியான சமயங்களில்,உடனே உணர்ச்சி வசப் படாமல்,பக்குவமாக சூதானமாக செயல்பட்டு சபை மாண்பைக் காத்திருக்கதான் வேண்டும்.

என்னதான் ஒரு கைப்புள்ளயாக கட்சியில் வலம்வந்தாலும் நறுக்கென ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார் மு.க.ஸ்டாலின்,அதாவது தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என்று.
அம்மையாரின்  இப்படிப்பட்டபொறுப்பற்ற  கர்ஜனைகளைப் பார்க்கிறபோது,அந்த பயம் நம்மையும் பற்றிக் கொள்ளத்தான் செய்கிறது.ஒரு ஊழல்ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, ஒரு சர்வாதிகாரியை அழைத்து வந்து விட்டோமோ? என்ற அச்சம் தினம் தினம் மனதில் எழுவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.இதை எண்ணும் போது வாளு போய்,கத்தி வந்தது டும்....,டும்...,டும்....,என்ற சிறுபிள்ளையில் படித்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

இதனால் சகலமாவர்களுக்கும் இந்த பஞ்சாயத்து தெரிவிப்பது என்னவென்றால்,ஒரு கதாநாயகனையும் ,முன்னால் கவர்ச்சிக் கதாநாயகியையும் தேர்ந்தெடுத்து ஆளஅனுப்பினால் இந்த மாதிரியான மசாலா படம் ரீதியில் அல்லாமல்  சட்டமன்றம் வேறு எப்படி காட்சியளிக்கும்.



குற்றம் இருசாராரும் செய்திருக்க ஒருவரை மட்டும் தண்டிப்பது சர்வாதிகார முறையில் சரியாக இருந்தாலும், ஜனநாயகத்தில் அது மிகவும் கண்டிக்கத்தக்கது.





இனியும் தன்னுடைய மணிமகுடத்தின் தன்மைக்கேற்ப, முதல்வர், மக்கள் பிரச்சனைகள் விடுத்து வீண்சவடால்கள் மாத்திரமே விடுவாரேயானால்,நாடாளுமன்றத்தேர்தலில் 40க்கு 40,பிரதமர் கனவு போன்றவை எல்லாம்  பரிதிமுன் தோன்றும் பனியாகிவிடும் என்பது நாம் சொல்லிதான் தெரிய வேண்டும் என்பதில்லை.







ஆதாரங்களை அளித்து, சீர் தூக்கி பேர் நோக்க உதவிய  இணையங்களுக்கும்   இந்த பஞ்சாயத்து நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சட்டமன்றத்தில் நடந்த அந்த கேலிகூத்தும், வெளியேற்றிய  பிறகு விஜயகாந்த் அளித்த புலம்பல் பேட்டியும்,மறுநாள் பத்திரிக்கையாளர் சந்திப்பும் காணொளியாக நம் தேன்மழையில் இங்கே காணலாம்.[காணொளி]

பஞ்சாயத்து கூறி முடித்ததும்,முடிவின் சாரத்தை மனதில் ஏந்திக்கொண்டு தேனாற்றங்கரை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தான் கொக்குவிரட்டி.

1 comments:

  1. இங்காவது பரவால்ல பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் சட்டபேரவையில் MLAகூட அல்ல,அமைச்சர்கள் ஆபாசவிடியோவையே பார்த்திருக்காங்க.தொலைக்காட்சிகளில் அம்பலமான பின்பு,ஆமாம் பார்த்தோம்னு ஒப்புக்கொள்ளவேறு செய்கிறார்கள்.காலத்தின் கொடும..இவனுங்க மக்களுக்கு சேவை செய்வானுங்களாக்கும்..
    இதுல நெஞ்சையே கத்திவச்சு கிழிக்கிறமாதிரியான விசயம் என்னன்னா பாத்ததுல ஒருத்தர் பெண்கள்நல மந்திரி.
    இதயெல்லாம் பாக்குறப்போ,
    கொலைகாரனையும்,கொள்ளைக்காரனையும்,சினமாக்காரனையும்,ஓட்டுப்போட்டு அனுப்பினா வேற எப்படி இருக்கும் என்று நம் பஞ்சாயத்து அடிக்கடி சொல்வது ரொம்பவே சரினு தான் தோணுது.
    தொ.கா ல அந்த அமைச்சர்கள் யாருன்னு காட்டினாங்க சரி,அப்படியே அந்த ஆபாசபடத்தையும் காட்டிருக்கலாமே..ஹி..ஹி..ஹி

    -பச்சிலைப்புடுங்கி

    ReplyDelete