Sunday, January 15, 2012

ஒரு நாடு செழிக்க,ஒரு ஊர் பலியா?

சப்பான் நாட்டில், புகுசிமாவில் நிகழ்ந்த அணு உலை விபத்திற்குப் பின்னர், அத்தகைய விபத்து கூடங்குளத்தில் ஏற்படாதபடி பாதுகாப்பு செய்யாதிருப்போமா என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் யோசிக்க வேண்டாமா
- என்கிறார் மாபெரும் இந்தியாவின் தலைமையமைச்சர் மன்மோகன்சிங். அதாவது, புகுசிமா விபத்து நிகழும்வரை அத்தகைய விபத்திற்கு வாய்ப்பான நிலையில்தான் கூடங்குளமும் இருந்தது. அதன்பின்னர் அந்த விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டுவிட்டது என்கிறார். எப்படி?

உக்ரைன் நாட்டு, செர்னோபிலில் ஏற்பட்ட அணு உலை விபத்து பூகம்பத்தால் நிகழ்ந்ததல்ல; சுனாமியால் ஏற்பட்டதல்ல. மனிதத் தவறுகளால் ஏற்பட்டதுதான். ஆனால், அந்த மனிதத் தவறுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகப் பலமாகச் செய்யப்பட்டுவிட்டன என்கிறார்கள் கூடங்குளம் அணுசக்தி விஞ்ஞானிகள். எப்படி?

அனைத்து யூகங்களுக்கும் அப்பாற்பட்டு நிகழ்வதுதான் விபத்து. ஆனால், கூடங்குளம் அணுமின் உலை அமைப்பு, அதன் இயக்கம், அங்கு ஏற்படும் அணுக்கழிவுக்கான பாதுகாப்பு என அனைத்து நிலைகளிலும் நாங்கள் யூகிக்கும் விபத்துகள் மட்டுமே ஏற்படக்கூடும். எங்களின் யூகங்களுக்கு அப்பாலாக வேறு வகையான விபத்து என்பது ஏற்படாது எனக் கூறுகிறார்கள் நம் விஞ்ஞானிகள் - எப்படி?

சிந்தனைக் குறைவு, கவனக்குறைவு இரண்டும் மனிதனின் இயற்கைக் குணங்கள். அணுமின் உலையில் தொடர்புடைய விஞ்ஞானிகளும், அங்கு பணியாற்றும் மற்றவர்களும் மனித இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீகப் பிறவிகளா? எப்படி?

சூரிய, சந்திர கிரகணங்கள் எந்தெந்தத் தேதிகளில் நிகழும் என்பதை இன்றைய அறிவியலுக்கு முன்பே நம் முன்னோர்கள் கணித்துரைத்திருக்கிறார்கள். ஆனால் பூமியின் உட்பகுதியில் எந்தெந்த தேதிகளில் நடுக்கமுண்டாகும் என்பது பற்றி நம் முன்னோர்களும் கூறவில்லை. இன்றைய அறிவியலாளரில் எவரேனும் எந்தெந்தத் தேதிகளில் உலகின் எந்தெந்தப் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்படும் என்பதைக் கால அட்டவணையிட்டுக் கூறத்தயாரா? முடியாது. காரணம் பூமியின் உட்பகுதி மாற்றங்கள், கோள்களின் இயக்கம்போல் ஓர் ஒழுங்குமுறைக்கு உட்பட்டவையல்ல. புகுசிமாவிலும், துருக்கியிலும் இன்ன தேதியில் நில நடுக்கம் உண்டாகும் என்பதை முன்கூட்டியே எச்சரிக்கமாட்டாதவர்கள் கூடங்குளத்தில் ஏற்படாது என்பதை மட்டும் சத்தியம் செய்து நம்பச் சொல்கிறார்கள். எப்படி?

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை நம்மை அலைக்கழிக்கின்ற நிலையில், கூடங்குளத்தில் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் பின்பற்றுகிறோம். எனவே, அஞ்சற்க என அபயமளிக்கிறார்கள். முதலாம் தலைமுறைத் தொழில் நுட்பக் குறைபாட்டால்தான் இரண்டாம் தலைமுறைத் தொழில் நுட்பமுண்டாயிற்று. அதுவுங் குறைப்பட்டதால்தான் மூன்றாம் தலைமுறைத் தொழில்நுட்பம் உருவாயிற்று. மூன்றாம் தலைமுறைத் தொழில்நுட்பம் மட்டும் முந்நூறு தலைமுறைக்கும் போதுமானது என்பது எப்படி?

அணுகுண்டு வீச்சு, அணு உலை விபத்து இரண்டும் ஒன்றுதான். இரண்டின் வழியாகவும் வெளிப்படும் அணுக் கதிர்வீச்சால் மனிதர் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களும், பஞ்சபூதங்களும் நஞ்சாதல் மெய்யப்பாடான உண்மையாகிறது. மின்சாரத் தேவைக்காகச் சாகவும் தயார் என மக்கள் கூறுகிறார்களா? அப்படியொரு வாக்கெடுப்பு நடத்த அரசு தயரா? ஒரு சாரார் சாகவும் தயார் எனக் கூறினாலும், அவர்களுக்காக மற்றவர்களும், ஏனைய உயிரினங்களும் சாகத் தயாராக வேண்டுமா? எப்படி?

கூடங்குளத்தில் பராமரிப்புப் பணிகளைச் செய்யவிடுங்கள். அவற்றில் தடங்கல் ஏற்பட்டால் அணுமின் உலை ஆபத்திற்கு உள்ளாகும் என எச்சரிக்கிறார்கள். அதாவது பராமரிப்புப் பணி சரிவர நடைபெறாவிட்டால் அணுமின் உலை ஆபத்தாகிவிடும் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், எதிர்காலத்தில் பராமரிப்புப் பணிகளில் எக்காரணங்கொண்டும் எந்தக் குறைபாடும் ஏற்படாதெனப் பரமண்டலத்தின் பெயரால் சத்தியம் செய்கிறார்கள். எப்படி?

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் கல்லணையும், தஞ்சைப் பெரிய கோவிலும், நெல்லையப்பர் கோவிலும் இடிந்துவிழவில்லை என்கிறார்கள். முதலாவது தஞ்சைப் பெரிய கோவில் இடிந்து விழவில்லை என்பதால், கூடங்குளம் அணு உலைக்கூடமும் இடியாது என்பது எப்படி? இரண்டாவது, கல்லணையும் தஞ்சைப் பெரிய கோவிலும் நிலநடுக்கத்திலும் இடியாது என எந்தக் கட்டடக்கலை வல்லுநரும் சான்றளிக்கவில்லை. அது, ஏற்படும் நிலநடுக்கத்தின் கடுமையைப் பொருத்தது. மூன்றாவது, கோவில் இடிந்து விழுந்தால் அதன் இடிபாடுகளில் சிக்குபவர் மட்டுமே சாவர். செய்தி கேட்டு ஓடிவந்து வேடிக்கை பார்ப்பவர்களும் சாகமாட்டார்கள். அணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வெள்ளத்தில் சிக்குவோர் தவிர, வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பவர்களும் சாகமாட்டார்கள். புகுஷிமாவில் அணுமின் உலையில் விபத்து ஏற்பட்டபோது, எந்த விஞ்ஞானியும் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டு உடல் நலத்துடன் திரும்பியதாகச் செய்தி இல்லை. நான்காவது, பெரிய கோவில் இடிந்து விழுந்தால் தஞ்சை நகர மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள். ஆனால் புகுஷிமாவில் அணு உலை தகர்ந்ததும் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டார்களே? அது தவறா?

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தானியங்கிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அணு உலைக் கூடம் பாதிக்கப்பட்டால் தானியங்கிக் கருவிகள் அணுமின் இயக்கத்தை நிறுத்திவிடும் என்கிறார்கள். தானியங்கிக் கருவீகள் பழுதடையவே மாட்டாவா? எப்படி?

உலகில் பல ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகள் பலவற்றில் இதுவரை விபத்து நிகழவில்லை என்பதால், அணு உலை ஆபத்தில்லாதது எனும் வாதம் அறிவார்ந்த வாதமாகுமா? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. செர்னோபில், புகுசிமா என இயற்கை நமக்கு இரண்டு சூடு வைத்துவிட்டது; போதாதா?

அணுமின் நிலையம் பாதிக்கப்படாது. பாதிக்கப்பட்டாலும் அணுக்கதிர் வீச்சு பரவாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவும் செய்யப்பட்டுள்ளன என்னும் வாதம் எதனை உறுதிப்படுத்துகின்றது? அணு உலை பாதிக்கப்பட்டால் அணுக்கதிர் வீச்சு பரவ வாய்ப்பிருக்கிறது. அணுக்கதிர் வீச்சு பரவுமானால் அனைத்துயிர்களுக்கும் ஆபத்து என்பதைத்தான் இவர்களின் அத்தனை விளக்கங்களும் உறுதிப்படுத்துகின்றன.

ஒன்று, அணுக்கதிர் வீச்சால் மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என மெய்ப்பிக்க வேண்டும். அல்லது, இயற்கை நிகழ்வுகள் நம் விஞ்ஞானிகளுக்குக் கட்டுப்பட்டவை என்பதற்கான ஆதாரம் மெய்ப்பிக்கப்பட வேண்டும். இரண்டும் இயலாதென்றால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடவேண்டும்.

பயந்தால் வரலாறு படைக்க முடியாது என்கிறார்கள். ஒரு தனி மனிதன் தனது உயிரைப் பணையம் வைத்து ஒரு முயற்சியில் ஈடுபடலாம். அவன் சாவு அவனுடன் அல்லது அவனது குடும்பத்துடன் முடிந்துவிடும். ஒரு சிலர் தமது அறிவுத்திறனில் தாம் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு சமூகத்தின், அது சார்ந்த அனைத்து உயிரினத்தின் அழிவைப் பணையம் வைக்கும் முயற்சி நியாயமாகுமா? எப்படி? அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்கிறார் வள்ளுவர். பயந்தால் வரலாறு படைக்க முடியாது என்போர், பயந்து, பயந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வானேன்?

உயிர்களின் வாழ்வுக்கு வழி வகுத்தல் சாதனை வரலாறு; பஞ்சபூதங்களின் அழிவுக்கு வழிவகுத்தல் வேதனை வரலாறு. எது வேண்டும்?

நமது பெருமதிப்பிற்குரிய அறிவியல் வித்தகர்களும், அறிவியலைத் தூக்கிப் பிடிக்கத்துடிக்கும் அறிவு ஜீவிகளும், நம்மை ஆளுகின்ற - ஆளத்துடிக்கின்ற தலைவர்களும் மேற்கண்ட ஒவ்வொரு கேள்விக்கும் திட்டவட்டமான - தெள்ளத் தெளிவான - காரணகாரியப் பொருத்தமான பதில் கூறக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறின்றி, இன்னின்னவாறாக அனைத்துப் பாதுகாப்பும் செய்யப்பட்டிருக்கிறது என்பதையே திரும்பத் திரும்பக் கூறுதலும், நான் யார் தெரியுமா? என்னைவிட உனக்கு ரொம்பத் தெரியுமோ - என மேட்டிமை நீட்டுதலும் அறிவியல் ஆகாது என்பதை மட்டும் மெத்தப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அணுசக்தி, மரபணு மாற்றம் இரண்டும் ஆக்கம் விரும்பி முதலிழக்கத் துணிகிற, நுனிக் கொம்பின் மேலும் ஊக்குகிற, கண்ணை விற்று ஓவியம் வாங்க நினைக்கிற பேராசைப் பேதைமையன்றி வேறல்ல.

அணு உலைக் கழிவுக்குச் செய்வது போல, கூடங்குளம் அணுமின் கூடத்தை முழுமையான பாதுகாப்புச் சுவர் எழுப்பி நிரந்தரமாக மூடுவதொன்றுதான் அறிவியலாரும், அரசியலாரும் தமிழ்நாட்டுக்குச் செய்ய வேண்டிய நல்வினையாகும்.

அணுக்கதிர் வீச்சு அபாயமானதுதான். ஆனால் உத்தரவாதமான முழுப்பாதுகாப்புடன் அணுமின்நிலையம் அமைக்க முடியுமென்றால், கொச்சி, மங்களூர், மும்பை, போர்பந்தர், கல்கத்தா, விசாகப்பட்டினம் முதலாகக் கடற்கரையூர்கள் எவ்வளவு இருக்கின்றன. அவ்வளவையும் விட்டுத் தமிழ்நாட்டிலேயே ஒன்றுக்கிரண்டாக அமைப்பானேன்?

செர்னோபில் விபத்திற்குப் பின்னர் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அணுமின் உலை அமையாதபடி அந்தந்த மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சியினருமாகச் சேர்ந்து எதிர்த்து தடுத்துவிட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அணுமின் திட்டத்திற்கு ஆதரவுக் குரல் எழும் மர்மம் என்ன? பன்னாட்டு முதலாளிகளின் தயவுக்காகத் தமிழ் மக்களைக் காவு கொடுக்கத் துணியும் துரோகக் கும்பல்களைத் தமிழ்மக்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் ஒரு பகுதி அழியவிருக்கிறது. அதன் பாதிப்பு நமக்குந்தான் என்பதுணர்ந்து தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் திரண்டெழுந்து, துரோகக் கும்பல்களின் சதிச்செயலை முறியடிக்க வேண்டும்.

நன்றி:சா. பன்னீர்செல்வம்(தென்செய்தி)

1 comments:

  1. காலத்தின் தேவை கருதிய விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete