Sunday, January 15, 2012

ஒரு புத்தகம் மனிதனை மாற்றுமா?

manianசென்னை புத்தகக் காட்சியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் "தீதும் நன்றும் புத்தகம் தரும்' என்னும் தலைப்பில் தமிழருவி மணியன் பேசியது:


150 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் என காந்தி எண்ணினார். ஆனால், தனது சீடர்களாலேயே தனது எண்ணங்களும் லட்சியங்களும் பாழ்படுத்தப்பட்டத்தை எண்ணிய காந்தி தனது 79 வயதில் மனம் நொந்து போனார்.

கோட்சே கொன்றது காந்தியின் உடலைத்தான். ஆனால், காந்தியின் ஆன்மாவைக் கொன்றது அவரது சீடர்கள்தான். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக ஒரு தலித் பெண் வர வேண்டும் என காந்தி எண்ணினார். அதேபோல வைஸ்ராய் கட்டடம் போன்ற பெரிய மாளிகைகளில் ஆட்சியாளர்கள் தங்கக் கூடாது என்றும் விரும்பினார். ஆனால், அவையெல்லாம் நடக்கவில்லை.

உலகில் எந்த ஒரு மொழியிலும் புத்தகத்துக்கு நூல் என்ற மிகவும் பொருத்தமான, அர்த்தமுள்ள பெயர்சூட்டப்படவில்லை. மனதில் இருக்கும் கோணல்களைக் கையில் இருக்கும் நூல்களைக் கொண்டு சரிப்படுத்தலாம்.

நூலைப் படிக்கும்போது அதில் கலந்து, கரைந்துவிட வேண்டும். அப்போதுதான் நூலில் இருக்கும் கருத்துக்கள் நமது சிந்தனையைத் தூண்டி, அறிவை வளர்க்கும்.

கற்றவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்லர். அவர்கள், தகவல்களை சேமித்து வைத்திருக்கும் குப்பைத்தொட்டிகள். பள்ளி, கல்லூரிகளில் thamizaharuvi_maniyanபடிக்கும் கல்வியை மட்டும் வைத்துக் கொண்டு அப்துல் கலாம், காமராஜர், எம்.ஜி.ஆர். போல மிகச் சிறந்த மனிதர்களாக மாறிவிட முடியாது.

தகவல்கள் மூலம் உலகத்தை அறிந்து கொள்ளலாம். நம்மை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. நாம் யார் என்று அறியும்போதுதான் வாழ்வின் உச்ச நிலைக்கு செல்ல முடியும்.

பணம் சார்ந்தது மேலைநாட்டுக்கல்வி. பண்பாடு சார்ந்தது நம்நாட்டுக் கல்வி. கற்றவர்களிடம் இருக்கும் தகவல்கள் கூடாது எனக் கூறவில்லை. அதிலிருந்து அறிவு பெற வேண்டும். அடுத்து, அறிவிலிருந்து ஞானம் பெற வேண்டும்.

காசு என்றால் குற்றம் என்று அர்த்தம். காசு அதிகரிக்கும்போது குற்றங்களும் அதிகரிக்கும். பிரெஞ்ச் மொழியில் ஒரு சொல்லுக்கு ஓர் அர்த்தம் மட்டும்தான் உண்டு. அதனால்தான் இங்கிலாந்தில்கூட நீதிமன்ற மொழியாக பிரெஞ்ச் இருந்தது. ஆனால், இந்தியாவில் நீதிமன்ற மொழியாக ஆங்கிலம் இருக்கிறது.

ஜெயமோகன் எழுதிய "இன்றைய காந்தி' என்ற நூலையும், அ.மார்க்ஸ் எழுதிய "காந்தியும் சனாதிகளும்' என்ற நூலையும் வாங்கிப் படித்தேன். இந்த புத்தகங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன.

ஒரே ஒரு புத்தகம் மனிதனை புரட்டிப்போட்டுவிடும். ஆபிரகாம் லிங்கன் அதிபராக மாறக் காரணம் ஒரே ஒரு புத்தகம்தான். மாக்கியவெல்லி எழுதிய "பிரின்ஸ்' என்ற புத்தகம்தான், மார்க்ஸின் சிந்தனையைத் தூண்டியது. அதனால்தான் "மூலதனம்' என்ற புத்தகத்தை அவர் படைத்தார்.

மாவீரன் நெப்போலியன் கையில் எப்போதும் இருந்த புத்தகம் "பிரின்ஸ்'. ஹிட்லரின் "மெயின்கேம்ப்' புத்தகத்தால்தான் 2-வது உலகப் போர் உருவானது. நல்ல புத்தகம் நல்ல சிந்தனைகளைத் தரும். மோசமான புத்தகம் தீய விளைவுகளைத் தரும்.

குழந்தைகளுக்கு "ஜென்' கதைப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். நல்ல சிந்தனைகளைத் தூண்டும் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றார் தமிழருவி மணியன்.

நன்றி : தினமணி

0 comments:

Post a Comment