Saturday, February 25, 2012

ரத்தக்காட்டேறிகளின் ராஜ்யமா தமிழகத்தில்?

நன்நெஞ்சே!

விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலையில்,பச்சிலைப்புடுங்கி வந்தான்.நேற்று தாய்க்கிழவி வடைசுட்டு குண்டாவில் போட்டு வைத்திருந்தாளாம்.அதை நோட்டமிட்டு, ஐந்து ஆட்டையாங்காக்காக்கள் அள்ளிச்சென்று விட்டதாம்.
புலம்பிகொண்டிருந்த தாய்க்கிழவியிடம் தொந்திநரி விவரம் அறிந்து,அடையாளம் கேட்டதாம்.காக்கைகள் கருப்பாகாக இருந்தது என்று அடையாளம் சொன்னாளாம்.அதை வைத்துக்கொண்டு குழம்பிக்கொண்டிருக்கையில் ஒரு யோசனை தோன்றியாதாம்.காக்கையின் எச்சத்தை வழிநெடுகிலும் மொகர்ந்து பார்த்துக்கொண்டே பிடித்துவிடாலாம் என்று.அப்படி சென்றுகொண்டிருக்கையில்,ஒரு மரத்திலிருந்து நாரதஅணில்,தன்னுடைய வேளமரத்தில்தான் உள்ளன என்று போட்டுக்கொடுத்ததாம்.அந்த மரத்திற்கு சென்று,தொந்திகள் வடையைப் போட்டுவிட்டு கீழே வரும்படி எச்சரித்ததாம்.ஆட்டையங்காக்கைகள் மறுத்து,தொந்திகள் மீதே கக்கா போய்விட்டதாம்.வெகுண்டதொந்திகள்,ஐந்து காக்கைகளையும் வடைசுட்ட குண்டாவை வீசி கொன்றே விட்டதாம்.பிறகு சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்று விளக்கம் வேறு கொடுக்கிறதாம் தொந்திகள்.கேள்விப்பட்ட பிற காக்கைகளும்,பருந்துகளும்,பட்சிகளும் அவ்விடத்திலேயே வட்டமிட்டபடிஇருக்க, வனமக்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது.ஏதாவது செய் பஞ்சாயத்து என்று சொன்னான் பச்சிலைப்புடுங்கி.
சரி பார்ப்போம் இரு என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தோம்.

என்னதான் இருந்தாலும் பட்டப்பகலில் ஒன்றல்ல இரண்டு வங்கிகளில் புகுந்து கொள்ளை அடிக்கிறான் என்றால் அவன் உண்மையாகவே தில்லுதூர தான் என்று ஆரம்பித்தான் கொக்குவிரட்டி.

உண்மைதான், பணம் பத்தும் செய்யவைக்கும்.இன்று அந்த பணமே அவர்களுக்குப் பத்து செய்ய வைத்துவிட்டது.(கொல்லப்பட்ட வங்கிக் கொள்ளையனின் பின்னணி பற்றி தேன்மழையில் இங்கே காணலாம்-இணைப்பு)

அந்த நேரத்தில் வனப்பட்சியும் வந்து சேர்ந்தது, சென்னை ஆணையர் திரிபாதி இந்த விவகாரம் பற்றிக் கூறியதைச் சொல்லியது,
"வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க இணை ஆணையர் (தெற்கு) சண்முக ராஜேஷ்வரன் துணை ஆணையர் சுதாகர் தலைமையில் 30 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுதாண்டா போலீஸ் - 2012 கதாநாயகர்!மற்ற வங்கிகளில் கைப்பற்றப்பட்ட 400 மணி நேர கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையன் உருவ படத்தை சேகரித்தோம். அதை கொள்ளை நடந்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் காண்பித்த பொழுது அதில் உள்ளவன் கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவன் என்று கூறினர்.

அதை வைத்து கொள்ளையன் படத்தை வெளியிட்டு துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு என்று அறிவித்தோம். பொதுமக்கள் புழங்கும் இடங்களிலும், டி.வி, பத்திரிக்கைகள் மூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட படங்களை விநியோகித்தோம்.

துப்பாக்கிச்சூடு நடந்த விதம்.


இதன் அடிப்படையில் எனக்கு 200 க்கும் மேற்ப்பட்ட தொலைபேசி தகவல்கள் வந்தது. வந்த தகவல்களிலிருந்து பெறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை நெருங்கினோம். அது மிக குறுகலான குடியிருப்பு பகுதி, சத்தம் கேட்டு வெளியே பொதுமக்கள் வெளியே வந்து விட கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தோம்.

இரவு 1 மணி அளவில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றோம். கதவு பூட்டப்பட்டிருந்தது. வெளியே வரச்சொல்லி எச்சரித்தோம். அப்போது திடீரென்று எங்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். நாங்கள் அப்போது சுடுவதை நிறுத்துங்கள் வெளியே இருக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தோம் ஆனாலும் அவர்கள் சுடுவதை நிறுத்தவில்லை.


அப்போது எங்களுடைய ஆய்வாளர்கள் ரவி, கிருஷ்டி ஜெயசீலன் ஆகியோர் காயமடைந்தனர் எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் சொந்த பாதுகாப்பு கருதியும் துப்பாக்கி சூடு நடத்தி கதவை உடைத்து உள்ளே சென்றோம். இதில் அறையில் இருந்த 5 பேர்களுக்கும் குண்டடிப்பட்டது. உடனடியாக காயமடைந்த எங்கள் அலுவலர்கள் 2 பேர் வீட்டில் இருந்த 5 பேர் மொத்தம் 7 பேரை எங்கள் போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தோம். அங்கு 5 பேர் இறந்து விட்டார்கள் என டாக்டர்கள் கூறியதன் பேரில் அவர்களது உடல் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காயம்பட்ட 2 ஆய்வாளர்களும் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி துணை ஆணையர் சுதாகர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தகவல்களை தவிர மற்ற விசாரணை விபரங்களை மாஜிஸ்ட்ரேட் விசாரணை உள்ளதால் கூற இயலாது.

மாஜிஸ்ட்ரேட் விசாரணை அறையின் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே 5 பிஸ்டல் 2 ரிவால்வர் கொஞ்சம் பத்திரிக்கைகள், செல்போன் சில சம்கார்டுகள் இருந்தது. மேலும் ஒரு பேக் ஒன்று இருந்தது. அதனுள் ரூ. 14 லட்சம் பணம் இருந்தது. கொல்லப்பட்டவர்களில் 4 பேர் பீஹாரை சேர்ந்தவர்கள் ஒருவன் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவன். அவர்களை பற்றிய மற்ற விபரங்கள் விசாரணையில் தெரிய வரும். கடந்த டிசம்பர் மாதம் தான் அவர்கள் இங்கு குடிவந்துள்ளனர். இன்று அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு போவதாக இருந்தது. சுடப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் இனிதான் தெரியவரும் பொதுவான விசாரணை நடத்தி வருகிறோம். கொல்லப்பட்டவர்கள் பற்றிய முகவரிகளை மட்டும் சேகரித்துள்ளோம். இனிமேல் தான் அவர்களை பற்றிய தகவலை விசாரிக்க முடியும்"  என்று தெரிவித்தாராம் ஆணையர் திரிபாதி தெரிவித்தார்.


இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி,
கடந்த ஜனவரி 3-ம் தேதி சென்னை பெருங்குடியில் இருக்கும் பரோடா வங்கியில் பிற்பகல் 2 மணியளவில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் செய்த 19 லட்சம் ரூபாய் கொள்ளை.

அடுத்து இந்த மாதம் பிப்ரவரி 20-ம் தேதி சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்க்கட்டளையிலிருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

பொம்மைத் துப்பாக்கிக்கே பணம் கொடுத்த வங்கி!! ஆனா இவருக்கில்ல!!!!


சரி,கொள்ளையடித்தார்கள்,கொன்றார்கள் இதில் என்ன தவறு இருக்கிறது.
இப்படிஎல்லாம் செய்தால் தானே கொள்ளையடிக்க நினைக்கும் எல்லோருக்கும் புத்திவரும்,தண்டனைகள் கூடக்கூடத்தானே குற்றங்கள் குறையும்.இந்த வடநாட்டுக்காரனுகளே இப்படித்தான்,பாருங்க திருப்பூரில் கூட நகைக்கடையில் கொள்ளை அதிலும் எவனாவது வடநாட்டுக்காரன்தான் திருடியிருப்பான்.இவங்களையெல்லாம் இங்க விட்டதே தப்பு என்று இளித்துக்கொண்டே சொன்னான் பச்சிலைபபுடுங்கி.

அவர்கள்தான் கொள்ளையடித்தார்கள் என்று யார் சொன்னது?கொள்ளையடித்ததாக சந்தேகபபடுபவர்களே யன்றி கொள்ளையடித்தவர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்கள் அல்ல.

அப்படியே புகைப்படத்தில் ஆணையர் வெளியிட்ட அந்த சிகப்பு வெள்ளை நீல் கோடிட்ட ஆள் தான் கொள்ளையடித்தான் என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்,அப்போ மீதமுள்ள நால்வர் யார்?அவர்களில் யாரவது ஒருவர் அப்பாவியாயிருந்தால்,போன உயிரை உங்களில் யாராவது மீட்டுக்கொடுப்பீர்களா?

இதுவரை தமிழகத்தில் 75உயிர்கள் இம்மாதிரியான காவலர்கொலைகளில் பலியாகியுள்ளன.இதனால் அனைவரும் திருந்திவிட்டனரா?அல்லது தமிழகத்தில் தான் குற்றங்களே நடைபெறுவதில்லையா?

நீங்களே எதேச்சையாக ஏதோ காரணத்திற்காக அந்த இளைஞர்கள் வீட்டுக்குள் சென்று விடுகிறீர்கள்.காவலர்கள் உங்களையும் கொன்றுவிடுகிறார்கள்.அப்படியானால் நீங்களும் குற்றவாளியா?
ஒரே ஒருவரின் படத்தை வைத்து மற்ற நால்வரையும் குற்றவாளிகளாக முடிவு செய்தது ஏன்?

என்ன ஏது என்று விசாரிக்க நேரம் கொடுக்காமல்,பெற்ற தகவல்களை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ளாமல்,காவல்த்துறை ஏன் இத்தகைய கொலைவெறி ஆட்டம் போட்டது!


இவர்களைக் காக்க,
இவர்கள் பலியாம்!!!சுட்டார்கள்;சுட்டோம் என்கிறார்கள்.வாழ்க்கையை சுகபோகமாக வாழஎண்ணிக் கொள்ளையடித்த இளைஞர்கள்,எக்காரணத்திற்காவும் உயிரைப்பணயம் வைக்கமாட்டார்கள்.அதுமட்டுமல்ல அது வெளியில் ஒரு கதவு மட்டுமே உள்ள வீடு,அப்படியிருக்க, வீட்டை சுற்றி வளைத்தப்பின் சிறிது தாமதித்து செயல்பட்டிருந்தால் கொள்ளையைப்பற்றி மேலும் பலதகவல்கள் கிடைத்திருக்குமே!அவசரகதியில் அனைத்தையும் முடிக்கும் வேகம் ஏன் வந்தது?இத்தனை தனிப்படைகள் வைத்தது எதற்க்காக, ஐந்துஉயிர்களை விசாரிக்காமலேயே பலிவாங்கத்தானா?

காவல்துறைக்கு உயிர் அவ்வளவு மலிவாகிப்போய்விட்டதா?
30லட்சத்திற்கே இந்த கொலை என்றால்-1லச்சத்து80ஆயிரம் கோடிக்கு?அம்மையாரின்66கோடிக்கு?வக்கத்தவன கொன்னா சுப்ரீம் கோர்ட் வக்கீலா வரபோறாங்க? என்ற நினைப்பு தானே இவ்வளவு தைரியத்தோடு,கொலை செய்ய வைத்தது என்று ஏதோ ஒரு உணர்ச்சியில் ஒரே மூச்சில் கூறி முடித்தாள் காட்டுச்சிறுக்கி.


 கொலையானவர்கள்:


கொள்ளையர்கள் தாக்கப்பட்டதாகக்கூறப்படும் காவலர்:

நடிகர்,நடிகைகள் மட்டும்தான் பவுடர் போட்டு நடிக்கணுமா என்ன???

அந்த தெரு.இந்த சந்துல தொட்டே விளையாட முடியாது!எப்படி சுட்டு விளையாடினாங்களோ?


தமிழ்நாட்டையே திரும்பிப்பார்க்கவைத்தத் தெரு!காலையில் பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்குப் பின்.


 அவள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது.சற்று சிந்திக்கையில் ஆணையர் விளக்கங்களில் நெருடல்களோ ஒட்டைகளோ எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்,அது நிறையவே உள்ளது.
உதாரணத்திற்கு,

சுடப்பட்டவர்கள் அந்த கதவா இருந்திருந்தா குண்டடி இல்லாம தப்பிச்சிருக்கலாமோ?சுட்டதுக்கப்புறம் வண்ணம் பூசீருப்பாங்களோ?
இந்த படங்களைப் பாருங்கள் ,இதில் சுவர்களிலோ, வெளிப்புற கம்பிக்கதவுகளிலோ துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த அடையாளம் இருக்கிறதா?அவ்வளவு ஏன் தலை,வயிறு,நெஞ்சு என்று எங்கெங்கோ சுடப்பட்டவர்களின் ரத்தக்கரையாவது சுவர்களில் இருக்கிறதா?இத்தனை பெரிய துப்பாக்கிச்சூட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டிகள் கூட உடையாமல் இருந்தது எப்படி?


நள்ளிரவில்தான் தகவலே கிடைத்து அந்த வீட்டின் முன் காவலர்கள் போய் சூழ்ந்துகொண்டதாக ஆணையர் கூறுகிறார், ஆனால் இரவு 10 மணியளவிலேயே காவலர்கள் வந்து இறங்கிவிட்டார்கள், கதவுகளை மூடிவிட்டு வீட்டுக்குள் போக ஆணையிட்டார்கள் என்று அண்டை வீடுகளில் குடியிருப்போர் சொல்கிறார்களே இதில் எதை நம்புவது?
அதை விட,யார் என்றே தெரியவராத நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு முதல் நாள் ஊடகங்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் அளித்த பேட்டியில் கொள்ளையர்கள் இந்த இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூற முடிந்தது எப்படி?
இந்த படத்தையும் பாருங்கள்,

1.துப்பாக்கி சூடு நிமிடங்கள் நீடித்ததாக ஆணையர் கூறுகிறார்,ஆனால் அக்கம்பக்கத்தில் குடியிருப்போருக்கு மெல்லிய சத்தமே கேட்டது என்கிறார்களே.அப்படிஎன்றால் எதற்க்காக இந்த அமைதியான துப்பாக்கிசூடு?.(ஒருவேளை உறங்கும் மக்கள் விழித்துவிடுவார்கள் என்று எண்ணிஇருப்பார்களோ என்னவோ-பச்சிலைப்புடுங்கி)

(2.மேலே உள்ள படத்தை காண்க)

3.கதவை உடைத்துதான் உள்ளே சென்றோம் என்கிறார்கள்.ஆனால் எந்த கதுவும் உடைக்கப்பாடாமல் உள்ளதே எப்படி?

4.ஏழு துப்பாக்கிகள் கிடைத்ததாகக் கூறுகிறார்கள்,பிறகேன் கொள்ளையின் போது பொம்மைத்துப்பாக்கியைபயன்படுத்தினர்(ஏம்பா ஒரு மாத இடைவெளியில் வாங்கி இருக்ககூடாதா? தமிழ்நாட்டில் துப்பாக்கிகளுக்கா பஞ்சம்?-பச்சிலைப்புடுங்கி)

5.துப்பாக்கிச்சூடு நடந்தது என்னவோ அதிகாலை 1மணிக்கு, ஆனால் ஊடகவியலாளர்களுக்கு விடியற்காலை 5.30 மணி வரை அவ்விடத்திற்குள் அனுமதி மறுத்தது ஏன்?(கதைக்கேற்றவாறு அமைப்பை மாற்ற வேண்டாமா?,அப்போ தானே கதைப்படி பத்திரிகைகளில் படம் வரும்சினிமாக்காரர்களே தப்புத்தப்பாக கதையமைத்து விட்டு தப்புத்தப்பாக படம் எடுத்துவிடுகிறார்கள்,அப்படியெல்லாம் ஆகிவிடக்கூடாதல்லவா?-பச்சிலைப்புடுங்கி)
மரணத்தைக் காவல்துறை தந்தால்,பரோட்டாவுக்கு சால்னா ஊத்துவதற்கா சட்டத்துறை?சட்டத்தை நாம்கையில் எடுத்தால் குற்றம்,அதே அவர்கள் கையில் எடுத்தால் நியாயமாம்.என்ன கொடுமை?
என்று தான் சேகரித்து வைத்திருந்த படங்களோடு வினவினான் கொக்குவிரட்டி.

மெய்!!,மோரில்விஷம் வைத்து வீரப்பனைக்கொன்ற சாமர்த்தியசாலிகள் ஏன் சென்னையில் இப்படி சொதப்பினார்கள் என்று தெரியவில்லை?கொஞ்சம் கூட நிதானிக்காமல் அவசரகதியில் கொள்வானேன்?
கொள்ளை போனது 30லட்சம்;பிடிபட்டது 14லட்சம்,மீதியை கொலையான கொள்ளையர்கள் திரிபாதி கனவில் வந்து சொல்வார்களா?அல்லது இவர்தான் அவர்கள் கல்லறைக்குச் சென்று விசாரிப்பாரா?

இன்னொரு செய்தி, பீகாரைச் சேர்ந்தவர்கள் வினோத் குமார், சந்திரி காரே, வினய் பிரசாத் அபய் குமார் மற்றும் ஹரீஷ் குமார் என்று மாநகர காவல் ஆணையாளர் திரிபாதி அறிவித்தாரே,  இவற்றில் பீகாரைச் சேர்ந்த சந்திரி காரே என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.  இந்த சந்திரி காரே த/பெ திரிபாலி காரே, மஞ்சிபூர், பட்டோட் மாவட்டம், பாட்னா, பீஹார் என்பவர், பீகார் மாநிலத்தில் தற்போது லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்று திரிபாதி நேற்று கூறிய அபய் குமார் என்ற பெயரில் அந்த முகவரியில் ஒருவருமே இல்லை என்பதும் வெளியாகியிருக்கிறது.   யாரென்றே தெரியாமல் சுட்டு விட்டு தவறான அடையாளத்தையும் அளித்த திரிபாதி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்??????

இவற்றையெல்லாம் பார்க்கும் போது,அம்மா மின்வெட்டுகொடுத்து தமிழகமக்களை கற்காலத்திற்கு இட்டுச்சென்றார்,ஆனால் தமிழ் நாடு காவல்துறை மக்களைக் காட்டுமிராண்டிக்காலத்துக்கே இட்டுச்சென்றுவிட்டது என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
அதுமட்டுமல்ல,சமீபத்தில் அம்மையார் காவல்துறையினரை இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்குங்கள் என்றாரல்லவா?அந்த இரும்புக்கரம் என்னவென்று அப்போது தெரியவில்லை.இப்போ தான் தெரிகிறது,அந்த  இரும்புக்கரம் -துப்பாக்கி.

நீங்கள் வளர்ப்பது விஷச்செடியாகக் கூட இருக்கலாம்!


காவல்துறையின் ராஜாங்கம் போல் உள்ளது தமிழகம்.இதைப் போன்ற போலி துப்பாக்கிச்சூடுகள் அதிகரித்தவண்ணம் உள்ளது கவலை அளிக்கிறது என்று சொல்லும்,ஒரு மனித உரிமை அமைப்பான- மக்கள் கண்காணிப்பின் நிர்வாக இயக்குனர், ஹென்றி கூறுவதையும் மறுக்கமுடியவில்லை!

இன்று காவல்துறையின் இந்த செயலை ஆதரிக்கும் மக்களுக்கு இந்த பஞ்சாயத்து கூறிக்கொள்வதெல்லாம்,இந்நிலை இப்படியே தொடருமேயானால், நாளை நாமும் அந்த ரத்தப்பசியடங்காத இரும்புக்கரத்திற்கு முன் நிறுத்தப்படலாம்,என்ன,,,,,,காரணங்கள் மட்டும் வேறாக இருக்கும்.
நேற்று மருத்துவரைக் கொல்லக் கத்தி எடுத்தவனையும்,ஆசிரியரைக் கொல்லக் கத்தி எடுத்தவனையும் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியாதோ,அதே போல் இந்த துப்பாக்கிச்சூட்டையும் நாம் ஏற்றுக்கொள்ளலாகாது!அப்படி இதனை ஏற்றுக்கொள்வோமேயானால்,இது வேறுமாதிரியான முன்னுதாரணத்திற்கு இட்டுச்சென்றுவிடும்!!

இறுதியாக இந்த பஞ்சாயத்தின் கூற்று,"கொண்டு வருக" என்பதற்கு பதில் "கொன்று வருக" என்று அவசரத்தில் கூறி,ஒரு உயிரை அநியாயமாக பலி  வாங்கிய நெடுஞ்செழியப்பாண்டியனின் முடிவு என்ன என்பதை வடமாநிலத்தவரான திரிபாதி அறிந்திருக்கமாட்டார்,தமிழறிந்த காவலர்கள் அவருக்கு முடிந்தமட்டும் தெளியப்படுத்தவும்!!!!

ஆதாரங்களை அளித்து, சீர் தூக்கி பேர் நோக்க உதவிய இணையங்களுக்கும்   இந்த பஞ்சாயத்து நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

பஞ்சாயத்தின் வேண்டுகோளைக் கேட்டதும்,தான் வேண்டிவந்தது கிடைத்தது போல் விழிகள் விரிந்து,இளித்துக்கொண்டே வேளமரத்தை நோக்கி சென்றான்  பச்சிலைப்புடுங்கி.

0 comments:

Post a Comment