Tuesday, February 14, 2012

நெஞ்சுக்குள்ளே மின்னல்நதி! - பிப்-14

ஊரெங்கும் மின்தட்டுப்பாடு..ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படாத அளவில் இன்று மட்டும் இளைஞர்கள் உடலில் மின்சாரம் பாயும்.ஏன், நெஞ்சுக்குள்ளே சின்னச்சின்ன மின்னல்நதி கூட ஓடும்!.
உடல் இரண்டாகி,உயிர் ஒன்றாகிய நிலை-காதல்!


அவசியம் இல்லாவிட்டாலும், சிந்திக்கவேண்டிய சூழல் ஒன்று இங்கு நிலவுகிறது.
அவன் பார்த்தான்-அவள் சிரித்தாள் இதுவோ காதல்.
ஒரு பெண்ணை நம் நலம் நாடும் உணர்வாக அன்றி,கவர்ந்திழுக்கும் காந்த உடலாக மட்டுமே பார்க்கும் விழிபடைத்த ஆண்கள் மத்தியில் எழும் உணர்வான அதுவோ காதல்?

ஏற்புடையதாய் இல்லையாயினும்,இதுவே இன்றைய பெரும்பான்மைக் காதல்!.

அம்மை-அப்பரின் அன்பு,கிட்டாமல் ஏங்கும் பலருக்கு வடிகாலாய் அமைந்திடும் காதல்.
அதற்காக கல்லூரிகள் தான் காதலின் புகலிடம் என எண்ணுதல் வேண்டா.இலக்கியம் பாடி,அக இருள் ஒழித்த நம் பூட்டன் காலத்திலேயே  காதல் கரைபுரண்டோடியது.
ஆங்கிலம் கருமித்தனமாது-காதல்,அன்பு,பாசம்,நேசம்,பற்று,காமம்,போன்ற பல சொற்களை LOVE என்ற ஒற்றை சொல் சொல்லிவிடும்.ஆனால் உறவுமுறைக்கேற்ப தமிழில் ஒவ்வொரு சொல்லும் வழங்கப்படும் உதாரணத்திற்கு,
பெற்றோரிடம் கொள்வது அன்பு.
உடன்பிறப்புகளிடம் தேடுவது பாசம்.
காதலியிடம் காண்பது காமம்.
கட்டியவளிடம் சுகிப்பது காதல்.
தாய்நாட்டிடம் நேசம்,
தன் உயிர் தந்த இறைவனிடம் பற்று.
என உறவுகளுக்குள் இங்ஙனம் பொருள் மாறும்.
ஆனால் இவை அனைத்தையும் LOVE என்பர் ஆங்கிலேயர்கள்.
இதில் உற்று நோக்கும் படியான  உண்மை யாதெனில்,உண்மையில் காதலர்தினம் கொண்டாட வேண்டியது கணவன்-மனைவியரே!.
ஆனால் அப்படி ஒரு நிகழ்வு யாங்கணுமே நடந்ததாக அறியோம்.
ஏன் கணவன் மனைவிக்கு மட்டும் அப்படியொரு சிறப்புரிமை?
காமத்தைக்கடந்த பின் தோன்றுவதல்லவோ-காதல்!
தேன்மழைத் தோழர்கள் கூட கூறுவார்களே ,உடல் இச்சைத் தீர்ந்தும்,தீராத உணர்வின் பெயர் தான்-காதல் என்று.

என்றால் இன்றைய காதலர்கள் யார்?அவர்கள் இந்நாளைக் கொண்டாடுவது பிழையோ?
புரிதல்,சகிப்புத்தன்மை,மன்னித்தல்,ஏற்றுக்கொள்ளுதல்,விட்டுக்கொடுத்தல்  குறைந்து,
கோபம்,குரோதம்,அகம்பாவம்,சுயநலம்,தேவைகள், ஆசைகள் பெருகி இக்கிழமைகளில் கிளம்பியுள்ள, காதல் தோல் போர்த்திய அவ்வகை உறவை என்னென்று சொல்லுவது?

தமிழர் இந்நாளைக் கொண்டாடுதல் என்பது-புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போலத் தான்.
இது நம் பண்பாடே அன்று!
உலகின் மேற்கிலே கிளம்பி,இந்திய வடக்கில் இறங்கி,நம் கலாச்சாரத்திற்குள் ஆழப் பாய்ந்த நஞ்சுகளுள் இதும் ஒன்று.

வருடத்திற்கு ஒரு காதலியை உடுத்தி சலவைக்குப் போட்டு விடும் மேலைநாட்டினரின் கலாச்சாரத்திற்கு இந்நாள் கொண்டாட்டம் ஒத்துப்போனாலும்,
மெய்யுரைக்க வேண்டுமானால்,கொஞ்சல் மட்டுமின்றி  உண்மையான அன்போடு,அரவணைக்கும் எண்ணம் பெற்ற எல்லா இல்லறத்தோருக்கும்,ஏன் சில மெய்யான காதலர்களுக்கும் கூட,ஒவ்வொரு நாளும் காதலர் தினமே!!


உண்மையுடன்,உறுதியுடன்,உள்ளச்சுத்தியுடன்,
காட்டுச்சிறுக்கி
தேன்மழை

1 comments:

  1. An Expressive Thought!! Awesome pic.

    Last line was perfect. adichika mudiyaathu.But todays definition of love is something different. LOVE is a time pass for them.

    Youngsters, Please think these "why, how, when, what" while you LOVE and not while you are about to get married.

    ReplyDelete