Friday, December 9, 2011

நீலிக்கண்ணீர், வேறென்ன...?

லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் புரவலர்களில் ஒருவராக இருக்கக்கூடாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.  டிசம்பர் 3, 1984ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற விஷவாயுக் கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள நிறுவனம்தான் டெள கெமிக்கல்ஸ். ஆகவேதான் இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.  
போபால் விஷவாயுக் கசிவு மிகவும் மோசமான, இந்தியாவை உலுக்கிய சம்பவம். இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக 3,787 பேர் இறந்துவிட்டதாகக் கூறினாலும், இந்த விஷவாயுவால் சுமார் 13,000 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் நிரந்தரமாக உடல்நலத்தை இழந்தும் கண்கள், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டும் கடந்த 27 ஆண்டுகளாக சிரமப்பட்டுக் கொண்டிருப்போர் பல ஆயிரம் பேர்.  இன்னமும்கூட அந்த ஆலையின் குறிப்பிட்ட பகுதியில் இருந்த சயனைடு, மண்ணுக்கு அடியில் ஊறி, நிலத்தடி நீரை பாதித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக என்ன செய்யலாம், நச்சேறிய இந்த நீரை எப்படி வெளியேற்றிவிட்டு, புதிய ஊற்றுகளுக்கு வழி காணலாம் என்று பல விதங்களில் ஆய்வுகளும், அறிக்கைகளும் வந்துகொண்டிருக்கின்றன.  இவற்றுக்காக யூனியன் கார்பைடு நிறுவனம் தண்டிக்கப்பட வேண்டும், உரிய இழப்பீடு பெறப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. அதற்காக, யூனியன் கார்பைடு போபால் நிறுவனத்தை வாங்கியுள்ள தற்போதைய நிறுவனம் என்ற முறையில் டெள கெமிக்கல்ûஸ குற்றவாளியாக்குவது சட்டப்படி சாத்தியமில்லை. நிலைமை இப்படி இருக்க, ஒலிம்பிக் போட்டிகளில் சில செலவினங்களை டெள கெமிக்கல்ஸ் ஏற்று நடத்துவதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதும் ஏற்புடையதாகத் தெரியவில்லை.  மேலும், இந்தப் போட்டி லண்டனில் நடைபெறுகிறது. அவர்கள் யார் யாரிடம் நிதியுதவி பெற்று, அல்லது புரவலர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்கள் என்பது அவர்களது விருப்புரிமை. டௌ கெமிக்கல்ஸ் 7 மில்லியன் அமெரிக்க டாலர்களை லண்டன் ஒலிம்பிக் நிகழ்ச்சிக்காக செலவிட முன்வந்துள்ளது. இது மிகப்பெருந் தொகை. இதை இந்தியாவில் நேர்ந்த துயரச் சம்பவத்துக்காக தவிர்த்துவிட வேண்டும் என்று நாம் கேட்பது நியாயமில்லை. அவர்கள் அதை ஏற்கவும் போவதில்லை. அதிலும், யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய ஒரு நிறுவனத்தின் நிதியுதவியை பெறக்கூடாது என்றால், அவர்கள் எப்படி ஏற்பார்கள்?  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் நடந்தது. இதில் நடந்த ஊழல்கள் இன்னும் முழு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. பல பணிகள் முற்றுப் பெறாத நிலையில் விழாவை நடத்த முடியுமா என்ற சந்தேகம்கூட ஏற்பட்டது. ஆனாலும், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஒரு முனகல் இல்லாமல் வந்து கலந்துகொண்டுவிட்டுச் சென்றார்.  லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளும் பங்கேற்கின்றன. நாமும் பங்கேற்று விளையாடுகின்றோம். இதில் அவர்கள் விழாவை எப்படி நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. நாம் விளையாடப் போகும் விளையாட்டுத் திடல் முறையாக இருக்கிறதா, நம் வீரர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பற்றி மட்டும்தான் பார்க்க வேண்டும், அதைத்தான் வலியுறுத்த வேண்டும். மாறாக இத்தகைய சில்லறை விவகாரங்களுக்காக அங்கலாய்ப்பது அர்த்தமற்றது.  இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை கிரிக்கெட் அணியுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று கேட்பதும், மும்பைத் தாக்குதலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியிருப்பதால் பாகிஸ்தானின் கிரிக்கெட் அணி, ஹாக்கி அணியுடன் இந்தியா விளையாடக்கூடாது என்று சொல்வதும் எப்படி நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றோ, அந்த அளவுக்கு அபத்தம் டெள கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் உதவிகளை ஒலிம்பிக் போட்டிக்குப் பெறக்கூடாது என்று சொல்வதும்!  போபால் விஷவாயு சம்பவத்தில் இந்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமேயானால், அதன் தலைமை அதிகாரி ஆண்டர்சனைக் கைது செய்யாமல், தப்பிச் செல்ல விட்டிருக்காது. அவரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கும். இத்தனைக் காலம் இழப்பீடு கிடைக்காத நிலைமையை உருவாக்கியிருக்காது. இந்த மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல், ஏதோ இந்த மக்கள் மீதும் இந்த சம்பவத்தின் மீதும் மாறாக் கசப்பு கொண்டதைப் போல நடிப்பது தேவையற்றது.  இம்மாதம் 3-ம் தேதி, தங்களுக்கு இன்னும் இழப்பீடு கிடைக்காதது குறித்து போபால் விஷவாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. ஆனால் இவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை நிலை.  போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர முடியாத, அல்லது தானே வழங்கி அவர்களது தாங்கொணாத் துயரை ஈடுசெய்ய முடியாத, இன்றும் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனையைக் கூட முறையாகவும் முழுமையாகவும் செயல்பட உதவாத அரசுக்கு, எங்கோ நடக்கும் விளையாட்டுப் போட்டிக்கு யாரோ ஒருவர் புரவலராக இருப்பதைக் குற்றம் கூறும் உரிமை கிடையாது.  யூனியன் கார்பைடு நிறுவனத்தை டெள கெமிக்கல்ஸிடமிருந்து கோகோ கோலா நிறுவனம் வாங்கிவிட்டது என்று வைத்துக்கொள்வோம், இந்தியாவில் கோகோ கோலாவுக்கு தடை விதித்துவிடுவார்களா என்ன?  எத்தனைப் பொய்களடி, என்ன கதைகள்! யாரை ஏய்க்க இந்த நாடகங்கள்..
நன்றி : தினமணி 

0 comments:

Post a Comment