அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?
உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை.
எப்படி? மேற்கொண்டு படியுங்கள் .
உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக:
ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், பேருந்தாலும் நம் பயணத்திட்டங்கள் அனைத்துமே சில நேரங்களில் தாறுமாறாகக் குழம்பி விடுகின்றன. அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா ?
நாம் ஓட்டிச் செல்லும் வாகனத்தைச் சட்டத்தை மீறி முந்திச் செல்லுகிறார் மற்றொரு ஓட்டுனர். அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
இந்த 10% இல் நமக்கு எந்த ஆளுமையும் கிடையாது . இதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது . இது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது..
மீதியிருக்கும் 90% முற்றிலும் மாறுபட்டது . அந்த 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம்.
எப்படி?
நடக்கும் சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் விதத்தில், அந்த மீதி 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம் .
டிராபிக் சிக்னலின் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை நம்மால் மாற்றியமைக்க இயலும்.
இதன் மூலம் நீங்கள் மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவதைத் தவிர்த்து விடவும் முடியும்.
சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்.
இதோ ஓர் உதாரணம்:
காலைச் சிற்றுண்டியைக் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் அருமை மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேநீர் உங்கள் மீது கொட்ட, அலுவலகம் செல்ல அணிந்திருந்த உங்களது சட்டை பாழ் .
நடந்த இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. இப்படி நடக்காமலிருக்க உங்களால் எதுவும் செய்திருக்க முடியாது.
ஆனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிக்கப் போவது, இதனை எதிர் கொள்ள நீங்கள் எடுக்கப் போகும் முடிவுதான்.
நீங்கள் சபிப்பீர்கள்.
தேநீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக அருமை மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பீர்கள்/ கண்டிப்பீர்கள்...
மகள் அழத் தொடங்குவாள்....
அடுத்ததாக, தேநீர்க் கோப்பையை மேஜையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் கோபம் மனைவி மீது திரும்பும் .
அதனைத் தொடர்ந்து மனவியுடன் ஒரு சிறிய வாய்ச் சண்டை. கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு சட்டையை அணிந்து வருகிறீர்கள்.
மாடியிலிருந்து கீழே வந்ததும் நீங்கள் காணும் காட்சி:
உங்கள் அருமை மகள் அழுது கொண்டே சிற்றுண்டியை முடித்து, பள்ளி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள் உங்கள் மகள் . மனைவியும் உடனடியாக அவருடைய அலுவலகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் .
இன்று மகளைப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்கள் தலையில். காரில் மகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள்.. மகளைப் பள்ளியில் கொண்டு சேர்த்த பின்னர்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியும் .
அலுவலகத்திற்குத் தாமதமாகி விட்டதால் சாலையின் வேக விதியை மீறி விரைவாகச் செல்கிறீர்கள்.
பதினைந்து நிமிட தாமதம்; அதற்கும் மேல் சாலையின் வேக விதியை மீறியதற்காக ரூபாய் 300 அபராதம் .
அப்பாடா என்று மகளைப் பள்ளியில் இறக்கிவிட, " போய் வருகிறேன்" என்று கூடச் சொல்லாமல் அவள் பள்ளி வளாகத்திற்குள் ஓடிவிட்டாள் . அதிலொரு சிறிய மனச்சஞ்சலம் உங்களுக்கு .
இருபது நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்தில் அடியெடுத்து வைக்கும் போதுதான் நினைவு வருகிறது, " ஆகா! அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டோமே " என்று.
உங்களின் அன்றைய தினத்தின் தொடக்கமே சற்றுக் கடுமையானதாகிவிட்டது. மேலும் அது அவ்வாறே தொடர்கிறது. எப்போது வீடு சென்றடைவோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது .
மாலையில் வீடு வந்தடைந்தவுடன் மனைவி, மகளின் நெருக்கத்தில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.
ஏன்?
காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான்.
இந்த நாள் இப்படி இனிமையில்லாத நாளானதன் காரணம்தான் என்ன?
அ) அந்த ஒரு கோப்பைத் தேனீரா ?
ஆ) தங்களின் அருமை மகளா?
இ) அபராதம் விதித்த அந்தப் போக்குவரத்துக் காவலரா?
ஈ) நீங்கள்தான் காரணமா ?
சரியான விடை: " ஈ". ஆமாம் நீங்களேதான் ஐயா !
அந்தத் தேநீர் சிந்தியதற்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல. அது உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் . நீங்கள் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் ?
இதோ இப்படி:
தேநீர் உங்கள் மீது கொட்டுகிறது..
அருமை மகள் அழப் போகிறாள்.
நீங்கள் மிக அன்பான குரலில், " பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்துகொள் அருமை மகளே !" என்று அவளைச் சமாதானப் படுத்துகிறீர்கள். உங்கள் மேல் சிந்திய தேனீரை முகம் கோணாமல் புன்முறுவலுடன் ஒரு டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து புதிய சட்டையையும் அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு நிதானமாக இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள் .
அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே அருமை மகள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதைக் கண்டு மகிழ்கிறீர்கள் !
வழக்கத்தை விட ஐந்து நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் முகமன்களைப் பரிமாறி அன்றைய வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள் . நீங்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிவதைக் கண்டு மேலதிகாரி பாராட்டுகிறார். மேலதிகாரியின் பாராட்டு கிடைத்த சந்தோஷத்தோடு மாலை வீடு வருகின்றீர்கள்.
மனைவியும் மகளும் வாசலில் மகிழ்ச்சியுடன் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைக் காண்கின்றீர்கள் . உங்கள் மனதில் மேலும் சந்தோஷம் களைகட்டுகின்றது!
வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?
இரண்டு விதமான தொடர் நிகழ்ச்சிகள்! இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன .
ஏன்?
காரணம், நிகழ்வுகளை நீங்கள் எதிர்கொண்ட விதம்தான்.
நடந்து முடிந்த சம்பவத்தின் முதல் 10% நிகழ்வினைக் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ உங்களால் முடியாது .
ஆனால் அதனைத் தொடர்ந்த மீதி 90% நிகழ்வினைத் தீர்மானித்தது , நீங்கள்தான். அதாவது, நீங்கள் அந்த முதல் 10% சம்பவத்தை எதிர் கொண்ட விதம்தான்.
இந்த 90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:
* யாராவது உங்களைத் தாழ்வாகப் பேசினால் ஈரத்தை முழுதும் உள்வாங்கும் பஞ்சுபோல ஆகி விடாதீர்கள் .
அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓடட்டும். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும்.
தவறான எதிர்கொள்ளலால் நீங்கள், நல்ல ஒரு நண்பரை இழக்கலாம் ; உங்களின் வேலையை இழக்கலாம் ; மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.
* உங்கள் வாகனத்தை ஒருவர், சாலை விதிகளை மீறி தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?
பொறுமையை இழந்து கடுகடுப்பாகி விடுவீர்களா?
உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? ( ஒரு நண்பர் குத்தியதில் ஸ்டீரிங் கழன்று விட்டது!) திட்டித் தீர்ப்பீர்களா ?
உங்களின் ரத்த அழுத்தம் எகிறுகிறதா?
முந்திச் சென்றவரின் வாகனத்தின் மீது மோத முயல்வீர்களா?
பத்து வினாடி தாமதமாகச் சென்று சேர்ந்தால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா?
உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?.
90/10 கொள்கையை நினைவிற் கொண்டு, அது பற்றிய சஞ்சலத்திலிருந்து விடுபடுங்கள்
* உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்? ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்?.
மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள் . கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .
* விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது .
அதன் காரணமாக அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த உங்கள் திட்டங்களெல்லாம் பாழாகப் போய் விடுகின்றன..
அதற்காக விமானப் பணிப்பெண் மீது ஏன் எரிந்து விழ வேண்டும்?. விமானம் புறப்படுவதற்கும் பணிப்பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அந்தத் தாமத நேரத்தைப் புத்தகம் படிப்பதிலோ, அருகிலிருக்கும் பயணியுடன் நல்ல கருத்துகளைப் பரிமாறுவதிலோ செலவிடுங்கள்.
நாமே ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.
90/10 கொள்கை பற்றி இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே!
இந்தக் கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பாருங்கள்.
அதன் பின் விளைவுகள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வியப்பாக இருக்கும்!
இதனைப் பயன்படுத்துவதால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை.
90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை !
மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்து, அதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.
கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும், மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும் .
அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.
நம் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வோமாக
0 comments:
Post a Comment