பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஆரம்ப காலத்தில் ‘சுப்ரமணியர் துதியமுது’, ’கதர்ராட்டினப் பாட்டு’ ஆகிய கவிகள் புனைந்து மகாகவி பாரதியின் வழியில் தெய்வத்திற்கும் தேசியத்திற்கும் தொண்டு புரியலானார்.
பின்னர் பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டு, பெண்ணுரிமை, சமூகநீதி, இந்தி எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, திராவிடநாடு பிரிவினை ஆகியவைகளைக் குறித்துத் தனது எண்ண ஓட்டங்களைக் கவிதையாய்ச் செதுக்கி, திராவிட இயக்க முன்னணிப் பாவலனாய் உலா வந்தார்.
இத்தகைய பெருமைக்குரிய பாவேந்தர் அவர்கள் மீது கவியரசர் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டிருந்தார். பாவேந்தரும் வளர்ந்தோங்கி வரும் கவிஞனுக்குக் காட்ட வேண்டிய அன்பைக் காட்டத் தவறவில்லை.
புதுவையிலிருந்து பாவேந்தர் சென்னை வரும் போதெல்லாம் கவியரசரின் ‘தென்றல்’ அலுவலகத்திற்கு வந்து அவரோடு உரையாடிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
1956ஆம் ஆண்டு கவியரசரின் சகோதரர் ஏ.எல். சீனிவாசன் அவர்கள் ‘அம்பிகாபதி’ எனும் திரைப்படத்தை உருவாக்க முயன்றபோது பாவேந்தர் அத்திரைப் படத்திற்குக் கதைவசனம் எழுதினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதிப் புதுவையில் இருந்த பாவேந்தர் அவர்களிடம் தொடர்பு கொண்டு அவரைச் சென்னைக்கு வரவழைத்துக் கவியரசர் தனது சொந்த்ச் செலவிலே ‘ஓட்டல் இந்தியா’வில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார்.
பின்னர், அப்படத்தின் இயக்குநர் ப. நீலகண்டன் அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பாவேந்தர் அவர்களால் அதை முழுமையாக எழுத முடியாமல் போனது.
பாவேந்தருக்கும் கவியரசருக்கும் இடையே இது போன்று நிலவிய உயரிய நேசத்திற்கு 1958ஆம் ஆண்டு சோதனைக் காலம் ஒன்று வந்தது.
அண்ணா அவர்கள் பெரும் முயற்சி எடுத்துப் பாவேந்தர் அவர்களுக்கு நிதி திரட்டி ரூபாய் 25,000த்தைப் பொற்கிழியாக நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களது தலைமையில் பிராட்வே பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் 28.07.46 அன்று நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
இதில் பாவேந்தர் அவர்களுக்கு ஏதோ மனக்குறை உள்ளார இருந்து உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின் அம் மனக் குறையை அவரது ‘குயில்’ 30.09.58 இதழில் தொடங்கி ‘அண்ணா துரையா எனக்குப் பொற்கிழி அளித்தார்?’ எனும் தலைப்பில் மூன்று இதழ்களின் வாயிலாகத் தனது எண்ணச் சிறகுகளை அதில் விரித்திருந்தார்.
இதில் அண்ணா அவர்களை மிகக் கடுமையான சொற்கள் மூலம் சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கட்டுரையைக் கவியரசர் படித்ததின் மூலம் குமுறும் எரிமலையாய், கொந்தளிக்கும் பெருங்கடலாய் மாறி, ‘திராவிட கீதம்’ பாடும் என் தலைவனையா பழிக்கின்றாய் என் எண்ணி இவரும் தனது 18.10.58 ‘தென்றல்’இதழில்,குரல் கெட்ட குயிலே கேள்’ எனும் கவிதை படைத்துப் பாவேந்தரைச் சாடியிருக்கிறார். அது இது:
காவியம் பயின்ற தாலும்
கற்பனை மிகுந்த தாலும்
ஓவிய வண்ணந் தோற்கும்
உயகவி யாத்த தாலும்
பாவலன் குயிலே உன்னைப்
பகுத்தறி வாளன் என்றே
பாவியான் நினைத்தேன்! இல்லை
பண்பிலாச் சிறுவன் நீயே!
பள்ளியின் சிறுவர் போலப்
பகுத்தறி வாளர் யாரும்
அள்ளியோர் இழிசொல் வீசி
அறிந்திலன்! குயிலே! வெட்கங்
கொள்கிறேன்!சீச்சீ! உன்னைக்
‘கொற்றவன்’ என்றார் மூடர்!
நள்ளிரா உள்ளம்! தூய்மை
நடுங்கிடும் சிறுமை கொண்டாய்!
புரட்சியின் தலைவன் என்றும்
புதுயுகக் கவிஞன் என்றும்
வரட்சியிற் படுத்த மாந்தர்
வாழ்வுறும் வளத்தன் என்றும்
பிறர்க்குநின் கவிதை காட்டும்
பெருமைகள் விளங்கச் சொன்ன
திறர்க்குநீ செலுத்தும் நன்றி
தீயினாற் படுக்கை போலும்!
எங்குநீ இருந்தா யென்றே
எம்மனோர் அறியா வேளை
இங்குநீ உள்ளாய் என்றும்
இப்புவிக் கொருவன் என்றும்
பங்கிலாப் புகழுக் கான
பாவலன் நீயே என்றும்
பொங்குமோர் சுவையிற் சொன்ன
புகழினைப் பழித்தாய் பாவி!
தலைவரால் ஒதுக்கப் பட்டுத்
தட்டழிந் திருந்தாய் அன்று!
விலையிலா அறிஞர் உன்னை
வியன்புவி முன்னே வைத்தார்
மலையென நிதியைச் சேர்ந்தார்
மயிரிழை சிதறா தாக
அலையெனும் மாந்தர் முன்னே
அளித்ததும் அறிவோம் நாங்கள்!
பழகுவோர்க் கினியன்! நல்ல
பண்பினர்க் கறிஞன்! கல்வி
அழகினை மன்மாய்க் கொண்ட
அண்ணனைத் திருடன் என்றாய்!
பிழைபுரி குயிலே! நீ முன்
பேசிய படியே சொல்வேன்!
”அழகுற முடிச்ச விழ்த்தாய்!”
ஆம்! அதன் தலைவோன் ஆனாய்!
‘பெரியவர்’ நின்பாற் கொண்ட
பெருமையைக் குயிலே! நன்றாய்
அறிகுவம்! “முறைப்பா டில்ல
அற்பன் நீ” என்றார்! “தஞ்சைத்
தெருவினிற் பாடும் தோழன்
திறம்உனை வெல்லும்” என்றார்!
புரள்கிறார் அவரைக் கட்டி!
பொறுபொறு! குத்தும், தாடி!
காலையில் மலரும் எண்ணம்
கண்துயின் றெழுங்கா லத்தில்
மூலையில் விழுமோ, இல்லை
மூளைதான் மூன்றோ, நான்கோ?
மாலையின் ‘மயக்கம்’ மீண்டும்
மாலையே தெளியும் போலும்!
வேலையில் லாத தாலே
வீண்பழி சுமத்த வந்தாய்!
எப்பழி யேனும் நாங்கள்
இம்மியும் அசையோம்! ஆனால்
பொய்ப்பழி உரைப்போர் நாவைப்
பொசுக்குவோம்! யாரா னாலும்
எப்பெருங் கவியா னாலும்
இழிபொருள் என்போம்! காறித்
துப்புவோம் குயிலே! கந்தல்
துணியெனப் புரளா தேநீ!
உன்னிடம் ‘பக்தி’ கொண்ட
ஒருவனே சொல்கிறான்! கேள்!
தென்னவர் தலைவன் வெற்றித்
திறத்தினன்! நின்னைத் தேடிச்
சொன்னவன்! நிதியைச் சேர்த்துத்
தந்தவன்! தூயன் வீரன்!
அன்னவன் முதுகிற் கையால்
அடிப்பவன் கயவன்! மூடவன்!
இழந்தநின் புகழை மீட்க
இதுவல பாதை! வீழ்ந்தே
அழிந்தநின் பெருமை மீள
அறிவுடன் எழுவாய்! நாயின்
இழிந்ததோர்’ தமிழர் நாட்டை
எழுப்பிய கவிஞன், தானே
இழிந்தொழிந் தழிதல் நன்றோ?
எண்ணியே செய்க செய்கை!
இருந்தநாள் புகழ்பெ றாத
இன்கவிக் கூட்டம் யாவும்
இறந்தபின் புகழை நாடும்
இத்தமிழ் அகத்தில், நீயே
இருந்தநாள் புகழைப் பெற்றாய்
இருகரங் குவிப்போர் கண்டாய்!
இறந்தபின் பாடை மீதே
எச்சிலைத் திரட்டா தேநீ!
அண்ணனின் பின்னே செல்லும்
அருந்தமிழ்ப் புலவோர் கூட்டம்
திண்ணமாய் இந்நே ரத்தில்
திரையினும் மிகவே யாகும்!
எண்ணமே பழுதாய்ப் போன
நின்னையும் எனது அண்ணன்
கண்ணியன் மன்னிப் பான்! என்
கவிக்குலம் மன்னிக் காது!
அன்பினாற் சொன்னேன்! உன்னை
அறிந்ததால் சொன்னேன்! இந்த
வம்பினாற் பெருமை சாகும்
வண்டமிழ் இனத்தர் வார்த்தைக்
கம்பினால் உதைப்பர்! நின்னைக்
கவியென மதியார்! பின்னாள்
என்பையும் நாய்கள் தின்னும்
இப்புவி மறந்தே போகும்!
காலச் சக்கரம் வேகமாய்ச் சுழன்றது!
எவர் மீது அளவற்ற நேயம் கொண்டு பாவேந்தரைத் தன் கவிதையால் சாடினாரோ, அவர் மீதே கவியரசருக்குச் சில அரசியல் காரணமாகக் காழ்ப்புணர்ச்சிகள் காலத்தால் காணும் நாள் வந்தது.
பின்னர் அவ்வியக்கத்தை விட்டு விலகித் தமிழ்த் தேசியக் கட்சியின் பிரதானத் தலைவராக விளங்கினார். அவ்வேளையில் த.தே. கட்சியின் முதல் மாநில மாநாடு முத்தமி மாநாடாக 1962 செப்டம்பர் 15, 16, 17 ஆகிய நாட்களில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றது.
முதல் நாள் மாநாட்டில் பாவேந்தர் அவர்கள் தலைமையில் கவியரங்கம், அதில் கவியரசர் ‘கவிஞன் கண்ட கவிஞன்’ எனும் தலைப்பில் பின்வருமாறு பாடுகிறார்.
இக் கவிதையின் சாரத்தை முழுவதும் கற்று உணர்ந்தால் கவியரசரின் பளிங்கு உள்ளம் தெள்ளெனப் புலப்படும்.
அக் கவிதை இதோ:
புரட்சிப் பாவல வணக்கம்; முத்தமிழ்
புரக்கும் விசுவ நாதரே வணக்கம்
தேவநேயப் பாவல வணக்கம்
திருக்குறள் வல்ல அறிஞரே வணக்கம்
குமரனுக்கும் தமிழ் சொல்லும் குன்றக்குடி முனிவா!
அனைவருக்கும் என் வணக்கம் ஆக!
திங்களொடும் பரிதியொடும் பிறந்து வந்த
செந்தமிழை இலக்கியத்தை இலக்க ணத்தைக்
கண்களெனக் கொண்டதமிழ்க் கவிதை மன்னா!
காவியத்தில் நாடகத்தில் மூத்த தந்தாய்!
பெண்ணடிமை தீர்த்துவைத்த பெற்றி கொண்டோய்
பேசவரும் பேச்செல்லாம் கவிதை யாகி
விண்ணதிர ஒலியெழுப்பும் குயிலே! நெஞ்சில்
விளக்கேற்றி வைத்தஉனை வணங்கு கின்றேன்.
கூடாத கூட்டுறவால் மதி மயங்கிக்
குறைமதியோர் நட்புறவால் வகை மறந்து
வாடாத நின் இளமைக் கவி மனத்தில்
வடுவிழுந்து போமளவு நானும் சொல்லக்
கூடாத வார்த்தையெல்லாம் சொன்னேன் ஐயா!
குற்றமது சுற்றத்தால் விளைந்த குற்றம்
பாடிவரும் பூங்குயிலே மன்னிப்பாய்! உன்
பரம்பரையில் இளையவன்யான் வணங்கு கின்றேன்
ஏடெடுத்துக் கவியெழுத நினைக்கும் போதில்
என்னெதிரே நின்னுருவம் ஏறு போன்று
‘படுதமிழ்’ என்றுரைக்கக் கேட்பேன்! அந்தப்
பக்தியிலே பன்னூறு கவிதை யாப்பேன்
கூடலிறை பாண்டியன்போல் நிமிர்ந்து நிற்கும்
குலத்தலைவா! யான்கற்ற கல்வி கொஞ்சம்,
நாடெனையும் நோக்கும்வகை நான் வளர்ந்தேன்
யாவுமுனைக் கற்றதனால் பெற்ற பேறு!
அன்றொருநாள் சிலரிடம் நீ குற்றம் கண்டாய்!
அவ்வேளை யானவர்தம் அருகில் நின்றேன்,
இன்றவர்பால் நீகண்ட குறைக்கு மேலே
இளைஞன் நான் காண்கின்றேன் என்றபோது
முன்னறிந்து சொன்னவன் நீ! அவர் மனத்தை
முழுதறிந்து சொன்னவன் நீ! நானோ சற்றுப்
பின்தங்கி நின்றுவிட்டேன்! வயதின் குற்றம்
பெரும்புலவா! நின்கணக்கில் பிழையே இல்லை!
சிறுகுழந்தை கடித்ததெனில் கோபம் கொள்ளாச்
சிறப்பான தாயுள்ளம் படைத்த தந்தாய்
இருபதுடன் பதினான்கு வயது சென்றும்
இயல்பினில்யான்குழந்தையென அறிவாயன்றோ!
இருள் சூழ்ந்த உலகினில் யான் வாழ்ந்த காலை
என்பெரும! நின்கையைக் கடித்துவிட்டேன்
பொறுத்தருள்வாய்! யானறிவேன் என்ற போதும்
பொறுக்காத நெஞ்சத்தால் புலம்புகின்றேன்!
நான்பாட நினைத்ததெல்லாம் இது தான்! அன்னை
நலங்காக்கக் கவிபாடும் உனை வணங்கித்
தேன்பாய்நின் செழுங்கவிதை மரபில் என்னைச்
சேர்த்துக்கொள் எனக் கேட்க வேண்டி வந்தேன்
ஊன் பாய்ந்து உயிர்பாய்ந்து, மணக்கும் உந்தன்
உயர் கவிதை கண்டதனால் கவிஞனாகி
'நான்கண்ட கவிஞ’னெனப் பாட வந்தேன்
நாயகனே! நீ வாழ்ந்தால் தமிழும் வாழும்!
பாவேந்தர் அவர்களிடம் பெரும் மதிப்புக் கொண்ட சில தமிழ் அன்பர்கள் ‘கவியரசர் பாவேந்தரை மதிக்கவில்லை’ எனும் குற்றச்சாட்டை எழுப்பியபோது, அதற்கான பதிலைத் ‘துக்ளக்’ 1.2.75 இதழில் ‘என்னை யாரென்றும் எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்’ என்னும் கட்டுரையில் பின்வருமாரு குறிப்பிடுகின்றார்.
”புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடத்தில் எனக்கு மட்டற்ற அன்பு உண்டு. கடைசிக் காலங்களில் நான்தான் அவரைக் காப்பாற்றினேன்.
அவரது மரணத்தின்போது சென்னையில் ஆன செலவுகளை எல்லாம் நான்தான் கொடுத்தேன்.
அப்போதெல்லாம் ஆட்டோ ரிக்ஷாவில் திடீர் திடீரென்று வருவார்.
“தம்பி, பணம் வேண்டுமப்பா!” என்பார். என்னிடம் இல்லாவிட்டால் கடன் வாங்கியாவது கொடுப்பேன்.
இப்போது நான் அவரை மதிக்கவில்லை என்கிறார்கள்.
பாரதிதாசனோடு சற்றும் தொடர்பில்லாதவர்கள் சாட்டும் அந்தக் குற்றச்சாட்டைப் பற்றி நான் கவலைப்படவில்லை!” என்றே குறிப்பிட்டார்.
மேலும் தமிழகத்தின் அரசவைக் கவிஞராக அவர் திகழ்ந்தபோது 1978 ஏப்ரல் 29, 30 ஆகிய நாளில் தமிழக அரசு கலைவாணர் அரங்கில் பாவேந்தர் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாக நடத்தியது. அதில் பங்கு பெற்ற கவியரசர், “புரட்சிக் கவிஞருக்கு இந்தப் பதவி கிடைத்து எனக்குப் பின் கிடைத்திருந்தால் என் மனம் முழு நிறைவாக இருந்திருக்கும்!” என்று குறிப்பிட்டார்.
பாவேந்தர் அவர்கள் மீது கவியரசர் கொண்டிருந்த அன்பு இவை மட்டுமல்ல!
பாவேந்தர் அவர்கள் உடல் நலக் குறைவால் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எவரும் சற்றும் எதிர்பாராத வகையில் 21.4.64 ஆம் நாள் இயற்கை எய்தி விடுகிறார்.
தகவல் அறிந்தவுடன் கவியரசர் துடிதுடித்துப்போய் அரசுப்பொது மருத்துவமனைக்குச் சென்று தனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறார்.
அத்தோடு அவரது உடலைப் புதுவைக்கு எடுத்துச் செல்வதற்குக் கண்ணதாசன் புரொடக்ஷன் வேன் ஒன்றைக் கொடுத்து உதவுகிறார்.
புதுவையில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கவியரசர் கலந்து கொண்டு அங்கே நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தனது உள்ளக் கிடக்கையின் உணர்வுகளைப் பதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : ஆர்.பி.சங்கரன்
(கண்ணதாசன் எனும் அனுபவப்புதையல்)
0 comments:
Post a Comment