வாழை
நெருங்கியது தீபாவளி.கோயம்பேடை நீண்ட அசௌகரியத்துக்குப்பின் அடைந்தேன்
அரசு பேருந்துகள் ஹவுஸ் புல் போடாத குறையாக இருந்த அனைத்திலும் மக்கள் தலைதவிர வேறொன்னும் காண இயலவில்லை.
தனியார் பேருந்து நிறுத்தம்.
கூவி கூவி அழைத்தார்கள்.
டிக்கெட் காகிதத்தில் மூன்றிலக்க எண்ணில் தொகை யிட்டு நீட்டினர்.
நாம் ஒன்றும் செவ்வாய் கோளுக்கு பயணச்சீட்டை கேட்கவில்லையே,பிறகேன் இத்துணை கிராக்கி?.இதை அவனிடம் கேட்க முடியுமா,? போடா வெண்ணை என்று துரத்தி விட்டாலும் பரவாயில்லை மண் தூற்றி பாட்டான் பூட்டன் வரை இழுத்து இலவு கொட்டிவிடுவான்கள்.
அதற்கு பணம் போனாலும் பரவாயில்லை எனும் அக்மார்க் தமிழனின் தன்மாணப் பண்போடு,நீட்டி முழக்கி வாங்கி வண்டிக்காய் காத்திருக்க ,சுண்டக்காயில் சீட் தைத்து எஞ்சின் பூட்டியது போல ஒரு பஸ்.அதன் பேர் பஸ்ஸாம் அவர்களே அங்ஙனம் சொல்லிக்கொண்டார்கள்.
தொலையுங்களடா க்ராதகர்களா, என ஏறி அமர்ந்து பயணம் துவக்கினால்,இருந்த இடத்திலிருந்து பேருந்து நிலையம் விட்டு வெளியே வர இரண்டு மணி நேரம்.அட இதுஎன்னடா அந்த ஏழுமலையானுக்கு வந்த சோதனை, வியக்க இயலவில்லை கோபித்தும் பயனில்லை, படுத்து தூங்கவும் வழியில்லை, உலகை இருட்டா வழியில்லையா என யோசித்தேன்.விழிகள் மூடிக்கொண்டேன்.
அந்த காலத்தில் எல்லாம் எங்கள் ஊரில் மைக் கட்டி அம்பாசிடர் காரில் வலம் வந்து அறிவிப்பார்கள் ,"தமிழ்நாடு தமிழ்நாடு தங்கத் தமிழ்நாடு, அண்ணா வாங்க அம்மா வாங்க,எத்தனையோ செலவு,அந்த செலவோட ஒரு செலவு. மலைக்கோட்டை மாநகராம் திருச்சி கேஏஎஸ் ராமதாஸ் ஒரு கோடி ரூபாய் சூப்பர் பம்பர் குலுக்கல்".அந்த குலுக்கலை எல்லாம் தடை பண்ணின அரசுக்கு , இந்த குலுக்கலுக்கு ஒரு சடைகூடப் போட வக்கற்ற நிலையை எண்ணி சிரித்தேன்,'குலுங்கிக் குலுங்கித்' தான்,ஆனால் அது என் மனப்பயன் வினையன்று.
விடிகாலை.
என் அருகமர்ந்தவரைக் காணோம்.இறங்கியிருப்பார்.
ஊர் வரப்போகிறது.இறங்க ஆயத்தமானேன்.
காலனி தேடுங்கால் காலில் தட்டியது,மணிபர்ஸ்.
அதில் என் அருகமர்ந்தவரின் அடையாளச்சீட்டுகள்.
கத்தையாகப் பணம்.
நான்கிலக்கத் தொகை!!
தட்.......கடவுள் இருக்கான்டா கொமரு மொமன்ட்...!
விரிச்சோடிய வீதியில் , வரவேற்றன பூட்டிய கேட்டுகள்.
முகம் பார்த்து , எடை பற்றின அன்னையரின் சில பரிகாசத்துக்குப் பின்,
அப்பாடா,இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,போய் கட்டிலில் விழுந்த போது, கட்டில் என்னைப் பார்த்து இவ்வணம் எள்ளியிருக்கலாம்.
விடி,அதி அடைமொழிகளை இழந்த வெறும் காலை வேளை.அந்த நான்கிலக்கத் தொகையை வைத்து நகைக் கடை தொடங்கி,அது நகைக் கடலாகி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோற்ற ஒற்றுமை கொண்ட அமித்தாப் பச்சனையும், போனால் போகிறதென்று,அவருடைய மருமகளாகிப்போன என் முன்னாள் காதலியையும் அழைத்து திறக்க வைத்து, என்னைக் வேல வெட்டி இல்லாத வெளங்காத வெளக்கெண்ண! என்று விளித்த அந்த பழைய ஹவுஸ் ஓனர் மூஞ்சில கரியப் பூசி, பார்ரா பார்ரா!! என்று கொக்கரித்து ஒரு முப்பது ஆண்டுகள் வாழ்ந்து முடித்துவிட்டேன்.அக்கையர் தொல்லையிடாதிருந்தால், இன்னொரு இருபது வருடங்கள் தாண்டி வாழ்வும் முடிந்திருக்கும்.நிறைவாய் ஒரு சுபம் போட்டிருக்கலாம்.
நான் இவ்வளவு நேரம் தூங்கினாலே அந்த அக்கையாரின் மூக்கி்ல் உஷ்ணம் ஏறிவிடும்.
காலை உண்டிக்கு இலை வேணுமாம்.அதுவும் வாழைஇலை.அதுவும் கிழிசல் வராத கருப்பண்ண கவுண்டர் தோட்டத்து தலைவாழை இலை தான் வேணுமாம்.அந்தாளு பெண்ணுக்கும் அக்கையாருக்கும் கொஞ்சம் நொரண்டு.அவர் வெடுக்கென்று பேசிவிடுவார், இவர் படக்கென்று சாத்திவிடுவார்,கதவையும் தான்.பள்ளித் தோழிகள் வேற.
வாழைத் தோட்டம்.
வாழைமரம் என்பது நெடு நெடுவென வளர்ந்த ஒரு சாதாரண புல்தான்.
ஒவ்வொரு வாழை மரமும், தனக்கு வேண்டிய உணவை மட்டும் தானாகவே எடுத்துக் கொள்கிறது.அவை வாழ மண்ணையும்,வளர மழையையும் இறைவன் தருகிறான்.அவசியத்தைத் தாண்டி,அவைகளின் தேவை அமைவதில்லை. தேவைகளைத் தாண்டி துளி நீரையும் தொடுவதில்லை.மிக முக்கியமாக இரண்டு தலை சிறந்த பண்புகள்,
#நீங்கள் வெட்டியே சாய்தாலும்,மீண்டும் வளர்ந்து உங்களுக்கே சத்தான வாழைப்பழம் தரும்.
#அடுத்த மரம், பக்கத்து மரம் எதிர்மரம் எதி்லிருந்தும் தன் தேவைகளுக்காக கடுகளவு ஆற்றலையும் எடுப்பதில்லை, பிடுங்குவதில்லை,தொடுவதுகூட இல்லை.
ஆனால் நீ??
கை கொட்டி சிரிப்பது போல ,காற்றில் இலை யாட்டி ஒலி எழுப்பியது.
-அரண்
தேன்மழை
Don't be ego on others. Try to grow yourself with your own. Don't spend on others for your growth